Published : 08 Jan 2022 03:59 PM
Last Updated : 08 Jan 2022 03:59 PM

கரோனா 3-வது அலை பிப்.1 முதல் 15-க்குள் உச்சம் தொடும்: சென்னை ஐஐடி கணிப்பு | ஆர்-வேல்யுவை குறைப்பது எப்படி?

கோப்புப்படம்

புதுடெல்லி: ’இந்தியாவில் கரோனா 3-வது அலை பிப்ரவரி 1 முதல் 15-ம் தேதிக்குள் உச்சமடையும். கரோனா பரவலைக் குறிக்கும் ஆர்-வேல்யு தற்போது 4 ஆக உயர்ந்துவிட்டது’ என்று சென்னை ஐஐடி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்-வேல்யு எண்ணில் 1-க்கு குறைவாக இருந்தால்தான் கரோனா பரவல் குறைவாக இருக்கிறது. 1 அல்லது அதிகமாகச் செல்லும்போது, கரோனா பரவல் வேகம் அதிகரிக்கிறது, அதாவது தொற்றுள்ள ஒருவர் மூலம் எத்தனை பேருக்கு பரவுகிறது என்பதைக் குறிக்கும். இந்தியாவின் ஆர்-வேல்யுவை அடிப்படையாக வைத்து சென்னை ஐஐடியின் கணிதத் துறை கரோனா பரவல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சென்னை ஐஐடியின் கணிதத்துறை, கணிணி கணிதவியல் மற்றும் புள்ளிவிவர அறிவியல் பிரிவும் இணைந்து இந்த ஆய்வை நடத்தின.

அதில் ”இந்தியாவில் கடந்த டிசம்பர் 25 முதல் டிசம்பர் 31-ம் தேதிவரை ஆர்-வேல்யு 2.9 என்ற வீதத்தில இருந்தது. ஆனால், 2022, ஜனவரி 1 முதல் 6-ம் தேதிவரை ஆர்-வேல்யு 4 என்ற அளவில் உயர்ந்துவிட்டது. ஆர்-வேல்யு அதிகரிக்கும்போது, கரோனா பரவலும் அதிகரிக்கும்

இதுகுறித்து சென்னை ஐஐடி கணிதத் துறையின் இணைப் பேராசிரியர் முனைவர் ஜெயந்த் ஜா கூறும்போது, ”ஆர்-வேல்யு 3 விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. முதலாவது பரவல் நிகழ்தகவு, தொடர்பு வீதம், தொற்று ஏற்படுதற்கும், தொடர்புகொள்பவருக்கும் இடையிலான கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் வரும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் அமைத்தல், கட்டுப்பாடுகள் ஆகியவற்றை அதிகப்படுத்தும்போது மக்கள் ஒருவரோடு ஒருவர் சந்திப்பது குறையும், அப்போது ஆர்-வேல்யு குறையத் தொடங்கும். இல்லாவிட்டால் ஆர்-வேல்யு அதிகரிக்கத்தான் செய்யும். எங்களின் முதல்கட்ட ஆய்வின்படி, கடந்த இரு வார புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இந்த எண்களைக்கூறுகிறேன். ஆனால், இந்த எண் மாற்றத்துக்குரியது. நாம் எவ்வாறு கட்டுப்பாடுடன் இருக்கிறோம், கட்டுப்பாடுகள் விதி்க்கப்படுவது, கரோனா தடுப்புவிதிகளை நாம் கடைபிடிப்பது ஆகியவற்றைப் பொறுத்து இந்த எண் மாறும்.

கரோனா 2-வது அலை உச்சமாக இருந்தபோதுகூட ஆர்-வேல்யு 1.69 புள்ளிக்கு மேல் செல்லவில்லை. ஆனால், தற்போது ஆர்-வேல்யு 2.69 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால், நாங்கள் கடந்த 2 வார புள்ளிவிவரங்கள் அடிப்படையில்தான் தெரிவித்துள்ளோம்.

இதன்படி, கரோனா 3-வது அலை, அதாவது நாம் சந்தி்த்துவரும் இந்த அலை பிப்ரவரி 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் உச்சமடையக்கூடும், எதிர்பார்ப்புக்கு முன்கூட்டியே உச்சமடையவும் வாய்ப்புண்டு.

நாம் தடுப்பூசி அதிகளவில் செலுத்தியிருக்கிறோம், பலர் முந்தைய அலையில் பாதிக்கப்பட்டு மீண்டு வந்திருக்கிறார்கள். ஆதலால், கடந்த அலையை விட இந்த அலை சற்று வேறுபட்டுதான் இருக்கும். மக்கள் தடுப்பூசி செலுத்திவிட்டதால் தனிமனித விலகலைக் கடைப்பிடிப்பதுகூட குறைந்துவிட்டது.

கரோனா முதல் அலையில் அதிகமான கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், தற்போது தடுப்பூசி செலுத்திவிட்டதால், கரோனா தொற்று அதிகரித்தாலும் கட்டுப்பாடுகள் பெரிதாக ஏதுமிலல்லை. ஆனால், இதில் பெரிய சாதகமான அம்சம் என்னவென்றால், நாட்டில் 50 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்திவிட்டார்கள்” என்றார் ஜெயந்த் ஜா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x