

புதுடெல்லி : பஞ்சாப்புக்கு வந்த பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்டு வரும் நிலையில், "பிரதமர் மோடியின் வாகனம் அருகே வந்தது பாஜக கொடிபிடித்த ஆதரவாளர்கள்தான், விவசாயிகள் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில்தான் நின்றிருந்தார்கள். பஞ்சாப்பையும், விவசாயிகள்அமைப்பையும் பிரதமர் மோடி அவமானப்படுத்துகிறார்" என்று விவசாயிகள் அமைப்பினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
பஞ்சாப்பில் கடந்த புதன்கிழமை நடைபெற இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற பிரதமர் மோடி, ஹூசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்கு சாலை மார்க்கமாகச் சென்றார். அப்போது நினைவிடத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள ஃபரேஸ்பூர் மேம்பாலத்தை பிரதமர் மோடியின் பாதுகாப்பு வாகனம் வந்தபோது, சிலர் மேம்பாலத்தில் சாலைமறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால், மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகனம்15 முதல் 20 நிமிடங்கள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இந்தப் பாதுகாப்புக் குறைபாடு காரணமாக பிரதமர் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்காமல் டெல்லி திரும்பினார்.
இந்தப் பாதுகாப்பு குறைபாடு தொடர்பான விவாரணை அறிக்கையை பஞ்சாப் அரசிடம் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டிருந்தது. அதன்படி மாநில அரசும் அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது.
இதற்கிடையே, மேம்பாலத்தில் பிரதமர் மோடியின் வாகனம் நிற்கும் பகுதிக்கு அருகே பாஜக கொடி ஏந்திய அந்தக்க ட்சியின் ஆதரவாளர்கள் சிலர் "பிரதமர் மோடி வாழ்க" என்ற கோஷமிட்டபடி நிற்கும் காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
"பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு குறைபாடு என்பது விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் இல்லை. ஏனென்றால், பிரதமர் கார் இருந்த இடத்திலிருந்து ஒன்றரைக் கிலோமீட்டர் தொலைவில்தான் போராட்டம் நடந்தது. ஆனால், பிரதமர் மோடியின் கார் அருகே பாஜகவினர் கொடி ஏந்தி கோஷமிட்டது பாதுகாப்பு மீறலாகத் தெரியவில்லையா?" என்று விவசாயிகள் அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்
விவசாயிகள் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா வெளியிட்ட அறிக்கையில், 'பிரதமர் மோடியின் பேரணிக்கு யாரும் வரவில்லை, தோல்வி அடைந்துவிட்டது என்பதை மறைக்க, எப்படியோ எனது உயிர் காப்பாற்றப்பட்டுவிட்டது எனக் கூறி பஞ்சாப் மீதும், விவசாயிகள் மீதும் அவதூறு செய்ய மோடி முயல்கிறார். இது மிகப்பெரிய வருத்தத்திற்குரியது.
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதென்றால் அது விவசாயிகளுக்குத்தான் என்பது இந்த தேசத்துக்கே தெரியும். அஜெய் மிஸ்ரா தெனி போன்ற கிரிமினல்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த தேசத்தின் பிரதமர், பொறுப்பான பதவியில் இருப்பவர் இதுபோன்ற பொறுப்பேற்ற கருத்துகளை பேசக்கூடாது என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா எதிர்பார்க்கிறது.
வைரலாகி வரும் வீடியோவில், பிரதமரின் பாதுகாப்பு வாகனத்துக்கு அருகே விவசாயிகள் செல்ல முயவில்லை, மாறாக பாஜகவினர்தான் செல்ல முயன்றார்கள்.பாஜக கொடியை வைத்துள்ள சிலர் , 'பிரதமர் மோடி வாழ்க' என்று கோஷமிட்டு வாகனத்தின் அருகே செல்ல முயல்கிறார்கள். ஆதலால், பிரதமரின் உயிருக்கு ஆபத்து என்பது முழுவதும் கட்டுக்கதை' எனத் தெரிவித்துள்ளது
இதற்கிடையே கிசான் ஏக்தா மோர்ச்சாவின் ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் அருகே பாஜகவினர் கட்சிக் கொடிஏந்தி பிரதமர் வாகனம் அருகே செல்ல முயன்ற வீடியோவையும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் ஒரு ட்விட்டர் பதிவில் “எந்த கல்வீச்சும் நடக்கவில்லை, துப்பாக்கி குண்டு பாயவில்லை, யாரும் மிரட்டவி்ல்லை. அப்படியிருக்கும்போது, யார் பிரதமர் மோடியின் உயிரைக் காத்தது. வியப்பாக இருக்கிறது, பாஜகவினர்தான் கொடி ஏந்தி கோஷமிடுகிறார்கள். அப்படியென்றால், பாஜக கொடியைப் பார்த்தே மோடி அச்சப்படுகிறாரா?” என விமர்சிக்கப்பட்டுள்ளது.