Published : 08 Jan 2022 02:06 PM
Last Updated : 08 Jan 2022 02:06 PM

'உறுதியான நிலைப்பாட்டை எடுங்கள்' - பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய ஐஐஎம் மாணவர்கள்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐ.ஐ.எம் கல்விக் குழும மாணவர்கள் இந்தியாவில் அதிகரித்துள்ள வெறுப்பு நிகழ்வுகள் தொடர்பாகக் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளனர்.

சில தினங்கள் முன் ஹரித்வார் தரம் சன்சத் நிகழ்வில் கலந்துகொண்ட சில இந்து மதத் தலைவர்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு மக்களை வலியுறுத்திய சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது ஐ.ஐ.எம் மாணவர்கள் இந்தியாவில் அதிகரித்துள்ள வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இந்தக் கடிதத்தில் ஐ.ஐ.எம் அகமதாபாத் மற்றும் ஐ.ஐ.எம் பெங்களூருவின் மாணவர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 183 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

அவர்கள் எழுதிய கடிதத்தில், ''நமது நாட்டில் இப்போது ஒருவித அச்ச உணர்வு நிலவுகிறது. சமீப நாட்களில் தேவாலயங்கள் உட்பட வழிபாட்டுத் தலங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. அதேபோல் நமது சொந்தங்களாகிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என அழைப்பு விடுக்கிறார்கள். அதுவும், எந்தவித பயமும் இல்லாமல், இதுபோன்ற அழைப்புகள் பகிரங்கமாக விடப்படுகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒவ்வொரு இந்தியருக்கும் அவரவர் மதத்தை கண்ணியத்துடனும், அச்சமின்றியும் கடைப்பிடிக்கும் உரிமையை வழங்கியுள்ளது. என்றாலும், தற்போது அதைப் பின்பற்றுவதில் நாட்டில் அச்ச உணர்வு நிலவுகிறது. மதம் அல்லது சாதி அடையாளங்களின் அடிப்படையில் சமூகங்களுக்கு எதிராக வெளிப்படும் வெறுப்புப் பேச்சுகள் மற்றும் வன்முறைக்கான அழைப்புகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.

இதுபோன்ற விவகாரத்தில் பிரதமர் ஆகிய நீங்கள் கடைப்பிடிக்கும் மௌனம் வெறுப்பு எண்ணம் நிறைந்த குரல்களுக்கு தைரியம் அளிப்பதாக உள்ளது. உங்கள் மௌனம், நம் நாட்டின் பன்முகக் கலாச்சாரக் கட்டமைப்பை மதிக்கும் ஒவ்வொருவருக்கும் வருத்தத்தை உண்டாக்குகிறது. மேலும் நமது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, பிரதமரே, எங்களைப் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறு உங்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டில் வெறுப்புப் பேச்சு மற்றும் சாதி அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக நீங்கள் பேச வேண்டும். நீங்கள் நாட்டைச் சரியான திசையில் வழிநடத்துவீர்கள் என்று நம்புகிறோம், பிரார்த்தனை செய்கிறோம்" என்று ஐ.ஐ.எம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x