Published : 08 Jan 2022 12:15 PM
Last Updated : 08 Jan 2022 12:15 PM

ஆக்சிஜன் ஆலைகளை போர்க்கால அடிப்படையில் அமைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் 

புதுடெல்லி: நாடுமுழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஆக்சிஜன் ஆலைகளை போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வென்டிலேட்டர் உட்பட ஆக்சிஜன் கருவிகள், பிஎஸ்ஏ, ஆக்சிஜன் ஆலைகள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிலவரம் மற்றும் கோவிட் மேலாண்மை குறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் காணொலி மூலம் ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.

தினசரி ஆய்வுகள் மூலம், 2வது அவசரகால கோவிட் நடவடிக்கை நிதியை(இசிஆர்பி), மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முழுமையாக பயன்படுத்தி, அதன் செலவின விவரங்களை தேசிய சுகாதார திட்ட பிஎம்எஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில் நாட்டில் கரோனோ பரவல் அதிகரிப்பதையும், ஒமிக்ரான் வகை தொற்று ஏற்படுவதையும் சுட்டிக் காட்டிய ராஜேஷ் பூஷன், மருத்துவமனைகளில் எந்தவித அவசர சூழலையும் சந்திக்க, அனைத்து வகையான ஆக்சிஜன் சாதனங்களையும் உறுதி செய்ய வேண்டியது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முக்கியமான பொறுப்பு என கூறினார். அவர் பேசியதாவது:

சுகாதார கட்டமைப்புகளை மாவட்ட அளவில் வலுப்படுத்த கூடுதல் நிதியை மாநிலங்கள் பெற முடியும். திரவ மருத்துவ ஆக்சிஜன் டேங்குகள் மற்றும் மருத்துவ ஆக்சிஜன் பைப்லைன்கள் அமைக்க 2வது அவசரகால கோவிட் நடவடிக்கை நிதியுதவி திட்டத்தின் கீழ் நிதி கிடைக்கிறது.

பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகளை மாநிலங்கள் தங்களின் சொந்த செலவிலும், சிஎஸ்ஆர் நிதி மூலம் போர்க்கால அடிப்படையில் அமைக்க வேண்டும். மருத்துவமனைகளில் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் கசிவின்றி ஒழுங்காக செயல்படுகிறதா என்பது பற்றி அனைத்து மாநிலங்களும் ஒத்திகை பார்க்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனை கல்லூரிகளிலும் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்படுவதை மாநிலங்கள் கண்காணிக்க வேண்டும்.

விநியோகிக்கப்பட்ட வென்டிலேட்டர்கள், மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளதா என்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். தேசிய ஆக்சிஜன் பயிற்சி திட்டத்தை, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் 22ம் தேதி தொடங்கியது. ஆக்சிஜன் ஆலை ஆப்ரேட்டர்களுக்கான தொழில்நுட்ப பயிற்சி நிறைவு செய்யப்படுவதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த பயிற்சியில் 738 மாவட்டங்களைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்டவர்கள் இணைந்தனர். ஆன்லைன் மூலம் பிஎஸ்ஏ ஆக்சிஜன் ஆலையை செயல்படுத்தும் பயிற்சியையும், பயிற்சி துறை இயக்குனரகம் நாடு முழுவதும் 24 பிராந்திய மையங்களில் நடத்துகிறது. இதில் இதுவரை, 4,690 பேர் 180 மணி நேர பயிற்சி திட்டத்தில், பயிற்சி பெற்றுள்ளனர். 6,825 பேர், 10 மணி நேர பயிற்சி திட்டத்தில் பயன்பெற்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x