

புதுடெல்லி: 222 நாட்களுக்குப் பின் இந்தியாவில் கரோனாவால் தினசரி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1.41 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். ஒமைக்ரான் தொற்றும் 3,071 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ''இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 986 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 222 நாட்களுக்குப் பின் தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.
இதனால் கரோனா பாசிட்டிவ் வீதம் 9.28 ஆக அதிகரித்துள்ளது. இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 68 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரானில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 3 ஆயிரத்து 71 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,203 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 876 பேரும், டெல்லியில் 513 பேரும், கர்நாடகாவில் 333 பேரும், ராஜஸ்தானில் 291 பேரும், கேரளாவில் 284 பேரும், குஜராத்தில் 204 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 72 ஆயிரத்து 169 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த பாதிப்பில் 1.34 சதவீதமாகும். 187 நாட்களுக்குப் பின் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையும் இந்த அளவு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் 205 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 463 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை குறைந்து 97.30 ஆகக் குறைந்துவிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பெறுவோர் கணக்கில் ஒரு லட்சத்து 806 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 15,29,948 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 68,84,70,959 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 150.60 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.