

புதுடெல்லி: மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏஎஸ்ஐ.யின் கல்வெட்டியல் பிரிவு மைசூரில் இயங்குகிறது. இதில், நாடு முழுவதும் கிடைக்கும் கல்வெட்டுகளை படித்து, ஆண்டுதோறும் தொகுப்புகள் வெளியிடப்படுகின்றன. இங்கு அதிக எண்ணிக்கையில் தமிழ் கல்வெட்டுகளின் நகல்கள் (மைப்படிகள்) வைக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட இந்த தமிழ் கல்வெட்டுகளின் படிகள் இன்னும் முழுமையாகப் படித்து பதிப்பிக்கப்படவில்லை.
இவற்றில் கவனம் செலுத்தாமல் தமிழை உள்நோக்கத்துடன் புறக்கணிப்பதாகவும் ஏஎஸ்ஐ மைசூர் அலுவலகம் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பான செய்திகள் ‘இந்து தமிழ்’ நாளிதழில் தொடர்ந்து வெளியாகின. இந்நிலையில், தமிழ் ஆர்வலர்களை சந்தித்து மூத்த வழக்கறிஞர் காந்தி பாலசுப்பிரமணியன் சென்னையில் ஆலோசித்தார். அதன் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் மணிமாறன் பெயரால் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது.
திமுக மாநிலங்களவை எம்.பி.யும் மூத்த வழக்கறிஞரு மான என்.ஆர்.இளங்கோ வாதிட்டவழக்கில், காந்தி பாலசுப்பிரமணியன் ‘இந்து தமிழ்’ செய்திகள் உள்ளிட்ட ஆதாரங்களை தொகுத்தளித்திருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் எம்.துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வழக்கில் தீர்ப்பளித்தது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ஏஎஸ்ஐ தலைமை அலுவலகத்தின் துணை இயக்குநர் எம்.ஜெனா நேற்றுமுன்தினம் வெளியிட்ட உத்தரவில், ‘‘தற்போது சென்னையில் உள்ள இந்திய தொல்லியல் துறையின் தென்பகுதி துணை கண்காணிப்பாளர் அலுவலகம், ‘தமிழ் கல்வெட்டுகளின் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்’ என மாற்றப்படுகிறது. மைசூரில் இருக்கும் கல்வெட்டுகள் பிரிவின் தமிழ் கல்வெட்டு மைப்படிகளையும் அதன் தொடர்புடைய தமிழ் ஆவணங்களையும் சென்னை அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கவும் ஏஎஸ்ஐ.யின் தென் பகுதி கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ‘சமீப கால மாக காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் தமிழ் கல்வெட்டு களை பதிப்பிக்கும் பணி பாதிப்பு’ என்ற தலைப்பில் ஆகஸ்ட் 19 ‘இந்து தமிழ்’ நாளி தழில் வெளியான செய்தியும் சேர்க்கப்பட்டிருந்தது. கடைசி நேரத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இந்த செய்தியையும் கவனத்தில் எடுத்துக் கொண்டது.
இதையடுத்து, தமிழ் கல் வெட்டுகள் அலுவலகத்தில் கல்வெட்டியலாளர்கள் பணியிடங்களில் குறைந்தது 100 பேராவது நியமிக்கப்பட வேண்டும்என்று தீர்ப்பில் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.