மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை செல்லும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கையில் ஓபிசிக்கு 27% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை செல்லும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: தற்போதைய இடஒதுக்கீடு நடைமுறைகளின்படி 2021-22 கல்வி ஆண்டுக்கான இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தலாம். மருத்துவப் படிப்பு சேர்க்கையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ இளநிலை படிப்புகளில் 15 சதவீத இடங்களையும், மருத்துவ முதுநிலை படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் அகில இந்திய தொகுப்புக்கு மாநில அரசுகள் அளித்து வருகின்றன.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு (ஓபிசி) 27 சதவீத இடஒதுக்கீடும், பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 10 சதவீத இடஒதுக்கீடும் வழங்கப்படுகிறது. இதை உறுதி செய்து கடந்த ஜூலையில் மத்திய அரசு, அரசாணையை வெளியிட்டது.

இந்த அரசாணையை எதிர்த்துஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்ததால் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த முடியவில்லை. இதன்காரணமாக அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதைக் கண்டித்து கடந்த டிசம்பரில் நாடு முழுவதும் மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணை விரைவுபடுத்தப்பட்டது.

இதனிடையே, உச்ச நீதிமன்றஉத்தரவின்படி, பொருளாதாரத்தில் நலிந்த பொதுப் பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பாகரூ.8 லட்சம் நிர்ணயிக்கப்பட்டதுகுறித்து ஆய்வு செய்ய நிதித்துறை முன்னாள் செயலாளர் அஜய்பூஷண் பாண்டே தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடந்த டிசம்பர் 31-ம்தேதி தனது அறிக்கையை மத்தியஅரசிடம் சமர்ப்பித்தது. அதில்பொருளாதாரத்தில் நலிந்த பொதுபிரிவினருக்கு ரூ.8 லட்சம் உச்சவரம்பு நியமிக்கப்பட்டது நியாயமானது என்று தெரிவிக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு பதிவு செய்தது.

இந்தச் சூழலில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் சந்திர சூட், போபண்ணா அமர்வு நேற்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. அதில் கூறியிருப்பதாவது:

பாண்டே கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்றுக் கொள்கிறோம். தற்போதைய இடஒதுக்கீடு நடைமுறைகளின்படி 2021-22 ஆண்டு இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்தலாம். அதாவது, மருத்துவப்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையைப் பின்பற்றி கலந்தாய்வு நடத்தலாம்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கவகை செய்யும் அரசாணை செல்லும். இதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கத் தேவையில்லை. எனினும், பொருளாதாரத்தில் நலிந்தபொது பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது குறித்து மார்ச் 3-வது வாரத்தில் இறுதி விசாரணை நடத்தப்படும். இதுதொடர்பான பாண்டே கமிட்டியின் அறிக்கை ஆய்வு செய்யப்படும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in