

பெங்களூரு: கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு மாவட்டம், மூடிகெரேவை சேர்ந்தவர் சித்ரா (65). தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட இவர் 40 ஆண்டுகளாக அங்குள்ள காபி எஸ்டேட்டில் வேலை செய்கிறார். இவரது கணவர் காளிமுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்ததால், சித்ரா தற்போது தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் 22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தனது மகள் அஞ்சலியை தேடி வந்தார்.
இவரைப் போலவே கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வசித்துவந்த அஞ்சலி (32) தனது தாயை, கணவர் சஜூவுடன் சேர்ந்து தேடி வந்தார். 2 ஆண்டுகளுக்கு முன் மூடிகெரேவுக்கு வந்த அஞ்சலி சமூக ஆர்வலர் மோனுவை சந்தித்து, “எனது பெற்றோர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். மூடிகெரேவை சுற்றியுள்ள காபி தோட்டங்களில் வேலை செய்கின்றனர். 1999-ம் ஆண்டு பள்ளிக்குச் செல்ல பயந்து, மரக்கட்டைகள் ஏற்றிய லாரி ஒன்றில் ஏறி கேரளாவுக்கு சென்றுவிட்டேன். இப்போது என் தாயை தேடி வருகிறேன்” என்று கூறி தனது முகவரியை அளித்துவிட்டுச் சென்றார்.
இந்நிலையில் தோட்டத் தொழிலாளி சித்ராவும் மகளை தேடுவதாக அறிந்த மோனு, அவரை சந்தித்து விவரம் கேட்டார். அவரிடம் அஞ்சலி குறித்த அங்க அடையாளங்களை சித்ரா தெரிவித்துள்ளார்.
இதை வீடியோவாக எடுத்த சமூக ஆர்வலர் மோனு கோழிக்கோட்டில் உள்ள அஞ்சலிக்கு வாட்ஸ் அப் மூலம் அனுப்பினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அஞ்சலி, இவர் தான் தனது தாய் என்று கூறி, கடந்த 4-ம் தேதி தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் மூடிகெரேவுக்கு வந்தார். சமூக ஆர்வலர் மோனு, அஞ்சலியை காபி தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு தனது தாயை பார்த்ததும் அஞ்சலி ஓடிப் போய் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் அவரை கண்டுபிடிக்க உதவிய தனது கணவர் சஜூ மற்றும் தனது பிள்ளைகளை அறிமுகப்படுத்தினார்.
இதுகுறித்து அஞ்சலி கூறுகையில், “22 ஆண்டுகளுக்கு பிறகு என் தாயை கண்டடைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இத்தனை ஆண்டுகள் தாய் இல்லாமல் அநாதையாக இருந்தேன். இப்போது என் தாய் கிடைத்துவிட்டதால் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்” என்றார்.