Published : 11 Jun 2014 09:00 AM
Last Updated : 11 Jun 2014 09:00 AM

திமுக ஆட்சியில் காவிரி நதிநீர் வழக்கை திரும்ப பெற்றது ஏன்?: கருணாநிதி விளக்கம்

தனது ஆட்சியின்போது காவிரி நதிநீர் வழக்கை திரும்பப் பெற்றது ஏன் என்பதற்கு திமுக தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய்க் கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காவிரி நதிநீர் குறித்த வழக்கை சத்தம் போடாமல் திரும்பப் பெற்ற கருணாநிதி என முதல்வர் பேசுவது முற்றிலும் தவறு. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டுக் கொண்டதால்தான், அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, தேவைப்பட்டால் மீண்டும் வழக்குப் போடலாம் என்ற நிபந்தனையோடு காவிரி நதிநீர் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து அனைத்துக் கட்சிகளின் கருத்துகளை முதல்வர் கேட்க வேண்டும் என்று நானும் தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும் சொன்னோம். ஆனால், முதல்வரோ அவசர அவசரமாக எனக்கு பதில் அளிப்பதாக கருதிக் கொண்டு, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தைத்தான் கொண்டுள்ளன. எனவே, அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை என்று அறிக்கை விடுத்துள்ளார். அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களைக் கேட்க வேண்டும் என்பது அர்த்தமற்ற செயல் என்றும் தெரிவித்திருக்கிறார்.

அர்த்தமற்ற செயலா?

அப்படியென்றால், கர்நாடக முதல்வர் ஜனநாயகரீதியாக அனைத்துக் கட்சிகளின் கருத்துக்களை கேட்டு, அதன்படி செயல்படுகிறாரே அது அர்த்தமற்ற செயலா? இதே ஜெயலலிதா, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காலத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டங்களை நடத்தினாரே, அதெல்லாம் அர்த்தமற்ற செயல் என்று கூறுகிறாரா அல்லது அனைத்துக் கட்சிகளைக் கூட்டி ஆலோசனை கேட்கின்ற அளவுக்கு இறங்கி வரத் தயாராக இல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறாரா என்பதை நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்த தமிழக மக்கள்தான் உணர்ந்து கொள்ள வேண்டும்.

பிரதமரிடம் மனு கொடுத்து ஒருசில நாட்கள்தான் ஆகின்றன.

மத்திய அரசுக்கு கால அவகாசம் தரவேண்டும். பிரதமர் நடுநிலையோடு நடந்து கொள்வார் என்று மத்திய அரசுக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவாக அறிக்கை வெளியிடுவதிலேதான் முதல்வர் ஆர்வம் காட்டியிருக்கிறாரே தவிர, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கவலைப்படவில்லை என்ப தைத்தான் அவருடைய அறிக்கை தெளிவுபடுத்துகிறது. கர்நாடக முதல்வர் அக்கறையோடு அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு, பிரதமரைச் சந்திக்க டெல்லி செல்கிறார் என்கிறபோது, காவிரிப் பிரச்சினையில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் தமிழக முதல்வருக்கு எந்த அளவுக்கு ஈடுபாடு இருக்கிறது என்பது நமக்குத் தெளிவாகவே தெரிகிறது.

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x