

புதுடெல்லி: தேர்தல் ஆணையத்தால் நேற்று நடத்தப்பட்ட கூட்டத்தில் சுகாதார அமைச்சகம் தெரிவித்ததாக வெளியாகும் செய்திகள், தவறானவை, அடிப்படையற்றவை மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியவை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் கரோனா பரவல் மற்றும் தடுப்பூசி செலுத்துவது குறித்த நிலவரத்தைத்தான் மத்திய சுகாதார அமைச்சகம், தேர்தல் ஆணையத்திடம் விளக்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த மாதங்களில் உத்தரப்பிதேசம், பஞ்சாப் போன்ற ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனால் கரோனா பரவல் காரணமாக தேர்தலை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்து வரும் நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் தொடர்பாக தவறான தகவல்கள் பரவிய நிலையில் அதற்கு மத்திய அரசு விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
"இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று நடத்திய கூட்டத்தின்போது, 'நாட்டின் கரோனா நிலவரம் கவலைப்படும்படியாக ஏதுமில்லை' என்றும் 'தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில், மிகச் சிலருக்கு மட்டுமே ஓமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அச்சமடையக்கூடிய வகையிலோ, கவலைப்படத்தக்க நிலைமையோ இல்லை' என்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்ததாக சில செய்திகள் வெளியாகியுள்ளது. இதுபோன்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை, தவறாக வழிநடத்தக்வடியவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை . பெருந்தொற்று பாதிப்புக்கு இடையே, தவறான பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில், இதுபோன்ற செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட கூட்டத்தில், நாட்டில் கரோனா பரவல் மற்றும் ஓமைக்ரன் குறித்த ஒட்டுமொத்த உலகளாவிய மற்றும் உள்நாட்டு நிலவரத்தைத் தான் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. அதேபோல், கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்தவும், நிலைமையை சமாளிக்கவும், அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆயத்ததநிலை குறித்த நிலவரம் தான் தெரிவிக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய மாநிலங்களின் நிலவரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதே தவிர மேற்கொண்டு எதுவும் விவாதிக்கப்படவில்லை."
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.