

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது சகோதரரின் பொறுப்பற்ற செயல் குறித்து கடுமையான அதிருப்தி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு குறித்து இன்று பிரதமர் மோடியை வீடியோ கான்பரன்சிங் மூலமாகச் சந்தித்து விளக்கம் கொடுக்க இருக்கிறார் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரை நேற்று நிலவரப்படி 15,421 பேர் அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒமைக்ரான் பரவல் மிக வேகமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி வருகிறார் மம்தா.
இதற்கு மத்தியில் தனது சகோதரர் செயலால் அதிருப்தி அடைந்திருப்பதாக மம்தா வெளிப்படையாகப் பேசியுள்ளார். மம்தாவின் இளைய சகோதரர் பாபுன் என்பவரின் மனைவிக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஆனால், பாபுன் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் சுற்றித் திரிந்து வருகிறார். இந்தச் செயல்தான் மம்தாவுக்கு அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
சகோதரர் மீதான அதிருப்தியை பிரஸ்மீட்டில் வெளிப்படையாகப் பேசியுள்ளார் மம்தா. ''வீட்டில் யாருக்கேனும் கரோனா பாதிக்கப்பட்டால் மற்றவர்களுக்கும் பரவுவதைத் தடுக்க தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். வெளியே சுற்றித் திரிய முடியாது. ஆனால், என் வீட்டில் நடப்பதைப் பார்த்து நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். என் இளைய சகோதரர் பாபுன் மனைவிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆனால், என் சகோதரர் அதைப் பற்றிக் கவலை கொள்ளாமல், தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றுகிறார். எனக்கு அது சுத்தமாகப் பிடிக்கவில்லை. நான் மிகவும் வெளிப்படையாகப் பேசும் நபர். எனவே, நாளை முதல் எங்கும் செல்ல வேண்டாம் என்று எனது சகோதரரிடம் சொல்லிவிட்டேன். அடுத்த 15 நாட்கள் நமக்கு முக்கியமானவை. மாநிலத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கக்கூடும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மம்தாவின் கார் டிரைவர்கள் இருவருக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் இன்று அவர் தலைமைச் செயலகம் செல்லவில்லை. மாறாக வீட்டில் இருந்து முதல்வர் அலுவலகப் பணிகளைக் கவனித்து வருகிறார். வீட்டில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்தலோசிக்க உள்ளார்.