Published : 07 Jan 2022 07:35 AM
Last Updated : 07 Jan 2022 07:35 AM

பிரதமர் மோடியை மறித்த போராட்டவாதிகள்: பாதுகாப்பை கேள்விக் குறியாக்கிய பஞ்சாப் அரசு

கடந்த புதன்கிழமை, பஞ்சாப் மாநிலத்தில் நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்றார் பிரதமர் மோடி. பிஷியானா விமான நிலையத்துக்கு காலை 10.20-க்கு சென்றபோது, வானிலைசரியில்லை. அங்கிருந்து ஹெலிகாப்டரில் பெரோஸ்பூரில் உள்ள ஹுஸைனிவாலா நினைவகத்துக்கு அவர் செல்வதாக திட்டம். 30 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்தும் வானிலை சரியாகாததால் காரில் செல்ல முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் போலீஸாருக்கு தகவல் அளித்து, பாதுகாப்பை உறுதி செய்தனர் உடன் இருந்த பாதுகாப்பு அதிகாரிகள். ஆனால்செல்ல வேண்டிய வழியில், போராட்டக்காரர்களின் சாலை மறியல் காரணமாக ஒரு பாலத்தில் சுமார் 20 நிமிடம் பிரதமரின் கான்வாய் தடைபட்டுக் காத்திருக்க வேண்டியதாகி விட்டது. அங்கு பாரதிய கிசான் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதால் ஒரு கட்டத்துக்கு மேல் அங்கு இருப்பதே ஆபத்து என்று முடிவெடுத்து, பிரதமரை அழைத்துக் கொண்டு வந்த வழியே திரும்பிவிட்டனர் அவரது பாதுகாப்பு அணியினர்.

டெல்லியில் விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, மத்தியஅரசு பிரச்சினைக்கு உரிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றுவிட்டது. இந்த நிலையில் போராட்டம் நடத்த வேண்டிய தேவை என்ன என்பது மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் எழுப்பும் கேள்வி. அப்படியே நடத்த விரும்பியிருந்தாலும் அதுகுறித்து ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அது தெரியாமல் இருந்திருக்க முடியாது. மோடி கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சி நடக்கும் வளாகத்துக்கு வெளியே நடத்தி இருக்கலாம். வானிலை சரியில்லாததால், குறிப்பிட்ட அந்த சாலை வழியாக பிரதமர் மோடி பயணம் செய்ய எடுத்தமுடிவு கடைசி நேர முடிவு. அரசுத்தரப்பில் போலிஸாருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரிந்த விஷயம். இது எப்படி போராட்டக்காரர்களுக்கு உடனே தெரிந்தது? அதற்குள் அவர்களால் எப்படி போராட்டத்துக்காக கூட்டத்தை கூட்ட முடிந்தது என்பது போன்றபல கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.

பிரதமர் ஹெலிகாப்டர் பயணத்தை ரத்துசெய்து விட்டு, இந்தப் பாதை வழியாகத்தான் வருகிறார் என பெரோஸ்பூர் எஸ்எஸ்பி தங்களுக்கு தகவல் தெரிவித்ததாக பாரதிய கிசான் அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பல்தேப் சிங் ஷிரா தெரிவித்திருக்கிறார். அவரே பிறகு, தங்கள் போராட்டத்தை கலைக்கத்தான் போலீஸ் அதிகாரி அவ்வாறு தெரிவித்ததாக கூறியிருக்கிறார்.

மீண்டும் மீண்டும்..

குஜராத் முதல்வர், 2-வது முறையாக பிரதமராக இருக்கும் மோடி, பாகிஸ்தானின் எல்லை மாநிலமான பஞ்சாபில் நடு வழியில் மறிக்கப்பட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக பாதியில் திருப்பிச் செல்கிறார் என்பது ஒட்டுமொத்தமாகவே தலைவர்களின் பாதுகாப்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.

தீவிரவாதத்தின் கோரப் பிடியில்சிக்கி ஏற்கெனவே 2 பிரதமர்களை நாடுஇழந்திருக்கிறது. இந்திரா, ராஜீவ் எனஇருவருமே அவர்களின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தபோது, மக்களின் பேரன்புக்கு உரியவர்களாக இருந்தபோது, தீவிரவாதத்துக்கு பலியாகினர்.இருவருமே காங்கிரஸ் தலைவர்கள்.இதுபோக, குஜராத் காங்கிரஸ் முதல்வராக இருந்த பல்வந்த்ராய் மேத்தா, எல்லையை ஒட்டி விமானத்தில்சென்றபோது, பாகிஸ்தானின் தாக்குதலில் பலியானார். இவ்வளவு இழப்புகளைசந்தித்த பிறகும், காங்கிரஸ் முதல்வர் ஒருவரே இப்படி அலட்சியம் காட்டலாமா என்ற கேள்வியும் எழுகிறது.

பஞ்சாப், காஷ்மீர், மேற்கு வங்கம் ஆகியவை எல்லை மாநிலங்கள். தமிழ்நாடு தென் திசையில் இருந்தாலும் இலங்கைக்கு அருகில் இருப்பதால், இந்திய தலைவர்கள் மீது எதிரிகள் தாக்குதல் நடத்த இங்கும் அதிக வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை கருதுகிறது. தலைவர்கள் வருகை தரும்போது பாதுகாப்பில் கூடுதல் அக்கறை காட்ட வேண்டிய கடமை இந்த மாநிலங்களின் ஆட்சியாளர்களுக்கு உள்ளது. அரசியல் ரீதியான வெறுப்பையோ, நிர்வாக ரீதியான வெறுப்பையோ இதில் ஒருபோதும் அனுமதித்துவிடக் கூடாது.

நாம் ஓட்டு போட்டாலும், போடா விட்டாலும் அவர்தான் நாட்டின் பிரதமர். அதை மறந்துவிடக் கூடாது. மாநிலங்கள் தங்கள் உரிமைக்காக போராட்டங்களை கையில் எடுக்கலாம். ஆனால் எந்த நேரத்திலும் கடமையை மறந்து விடக் கூடாது.

ராஜ்நாத் சிங்கை காப்பாற்றிய சத்தீஸ்கர் முதல்வர்

நக்சல் தீவிரவாதிகள் நிறைந்த மாநிலம் சத்தீஸ்கர். கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக கஞ்சுரா கிராமத்துக்கு சென்றார் ராஜ்நாத் சிங். அப்போது உள் துறை அமைச்சராக இருந்த சிங், இவர்களுக்கு எதிராக பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதனால் கடும் கோபத்தில் இருந்தனர் நக்சல்கள்.

இந்த நிலையில் ராஜ்நாத் சிங் வந்த ஹெலிகாப்டர் திடீரென பழுதடைந்தது. பிரச்சாரத்துக்காக அடுத்த இடத்துக்கு செல்ல வேண்டிய நிலையில், பதற்றமாகி விட்டனர் பாதுகாப்பு அதிகாரிகள். இந்த விஷயம் வெளியே பரவி நக்சல்களின் காதை எட்டினால் அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை. இந்த தகவல் தெரிந்ததும் முதல்வராக இருந்த பாஜகவின் ராமன் சிங், ராஜ்நாத் சிங்கிடம் பேசினார். உரிய ஏற்பாடுகளை செய்வதாக உறுதி அளித்தார்.

அரை மணி நேரத்தில் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டார். அதுவரை அங்கிருந்த மக்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார் சிங். பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் போலீஸார் பாதுகாப்புடன் பத்திரமாக அடுத்த பிரச்சாரக் கூட்டத்துக்கு ராஜ்நாத் செல்ல உதவினார்.

"எங்கள் வாகன அணிவகுப்பு பல சிறிய கிராமங்களையும், குறுகிய சாலைகளையும் கடந்து செல்ல வேண்டியிருந்தது. போகும் வழியில் எல்லாம் போலீஸாரை பார்க்க முடிந்தது. எந்த தொந்தரவும் இல்லாமல் பத்திரமாக அடுத்த பிரச்சார இடமான தரம்ஜய்காருக்குச் சென்றோம். மாநில போஸீஸ் அதிகாரிகளும் எங்கள் கூடவே வந்தனர்.

அனைவருக்கும் ராஜ்நாத் சிங் நன்றி தெரிவித்தார். அவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார். அதற்குள் அங்கிருந்து செல்ல வேறு ஒரு ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்திருந்தார் முதல்வர் ராமன் சிங். நன்றியுடன் டெல்லி திரும்பினோம்" என தனது திகில் அனுபவத்தை பதிவு செய்திருந்தார் உடன் சென்ற ஒரு பாதுகாப்பு அதிகாரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x