Published : 07 Jan 2022 06:54 AM
Last Updated : 07 Jan 2022 06:54 AM

முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் நிலையில் ராஜேந்திரபாலாஜியை கைது செய்யும் அவசரம் உள்நோக்கமா? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய அவசரம் காட்டியதற்கு அரசியல் உள்நோக்கம் காரணமா? என தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி ரூ.3 கோடி வரை பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனக்கு முன்ஜாமீன் அளிக்கக் கோரி, ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

அந்த உத்தரவை எதிர்த்தும், தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரியும் ராஜேந்திரபாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. இதனிடையே, தலைமறைவாக இருந்த ராஜேந்திரபாலாஜியை தமிழக போலீஸார் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலத்தில் வைத்து கைது செய்தனர்.இந்நிலையில், ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில்நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் உடையதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு தமிழக அரசு தரப்பில்இல்லை என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, ‘‘ராஜேந்திரபாலாஜியை கைது செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி மட்டுமின்றி அதற்கும் மேலானது. இந்தவழக்கை காரணம் காட்டி ராஜேந்திரபாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமின்றி அவருக்காக வாதிட்ட வழக்கறிஞர்களின் வீடுகளிலும்கூட போலீஸார் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தியுள்ளனர். அவர் கைது செய்யப்பட்ட பிறகும்கூட அவரது வழக்கறிஞர்களுக்கு இந்த துன்புறுத்தல் தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு விட்டதால் அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி புதிதாக ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘‘இந்த வழக்கை நாங்கள் இன்று (நேற்று) விசாரிக்கும் நிலையில் ராஜேந்திரபாலாஜியை கைதுசெய்ய இவ்வளவு அவசரம் காட்டியது ஏன்? இதற்கு அரசியல் உள்நோக்கம் காரணமா? கரோனா காலகட்டத்தில் அனைத்து வழக்குகளையும் உடனடியாக நாங்கள் பட்டியலிட்டு விசாரிக்க வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா’’ என கேள்வி எழுப்பினார்.

அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் வி.கிருஷ்ணமூர்த்தி, அரசு வழக்கறிஞர் அரிஸ்டாட்டில் ஆகியோர், ‘‘முன்னாள் அமைச்சர்ராஜேந்திரபாலாஜி மீது வேலைவாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக பல்வேறு புகார்கள் வந்துகொண்டே இருந்தாலும், அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் தலைமறைவாகி விட்டார். அதனால்தான் அவரை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது’’ என்றனர்.

அப்போது தலைமை நீதிபதி,‘‘அதற்காக அவரது வழக்கறிஞர்களை எதற்காக துன்புறுத்த வேண்டும்’’ என்றார். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டு தெரிவிப்பதாக தமிழக அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘வழக்குகளை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரபாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களுக்கு வரும் ஜன.10-க்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

மேலும், இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் பாபுராய், வழக்கறிஞர் முத்துபாண்டியன், பலராம் ஆகியோரை கைது செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x