

மும்பை: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த இருவரை குற்றவாளிகள் என மும்பை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தாக மொஷின் சய்யது (32), ரிஸ்வான் அகமது (25) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, கடந்த 2016 முதல் சிறையில் உள்ளனர். இவர்கள் இருவரும் மும்பை என்ஐஏ நீதிமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்த மனுவில், தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தனர். பிரச்சார வீடியோக்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதாகவும் தற்போது தவறை உணர்ந்து வருந்துவதாகவும் மனுவில் கூறியிருந்தனர்.
இதையடுத்து, சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தில் 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்க வகை செய்யும் பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் இருப்பதாக நீதிமன்றம் நேற்று முன்தினம் அவர்களிடம் விளக்கியது. இதற்கு, தாங்கள் இதை அறிந்துள்ளதாகவும் தாமாக முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் இருவரும் தெரிவித்தனர்.
இதையடுத்து இருவரையும் மேற்கண்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று முன்தினம் அறிவித்தது. தண்டனை தொடர்பான விவாதம் ஜனவரி 7-ல் (இன்று) நடைபெறும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மும்பை புறநகர் மால்வானி பகுதியை சேர்ந்த சய்யது, அகமது உள்ளிட்ட 4 பேர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேரு வதற்காக வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தங்கள் பகுதி முஸ்லிம்ஆண்கள் பலரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போராளிகளாக மாறுமாறு கட்டாயப்படுத்தி வந்ததாகவும் என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது.
- பிடிஐ