

மும்பை: முஸ்லிம் பெண்களை இணையதளத்தில் அவதூறாகச் சித்தரித்து, அவர்களை ஏலம் விட்ட 'புல்லி பாய்' செயலியை உருவாக்கியவரும், இதில் மூளையாகச் செயல்பட்டவருமான அசாமைச் சேர்ந்த 21 வயதான பொறியியல் கல்லூரி மாணவரை டெல்லி போலீஸார் இன்று கைது செய்தனர்.
முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு, அவர்களை ஏலம் விடும் புல்லி பாய் ஆப்ஸ் குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸிலும், டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர் டெல்லி போலீஸிலும் புகார் செய்திருந்தனர். இரு நகரங்களிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
சிவசேனா எம்.பி. பிரியங்கா திரிவேதி ட்விட்டரில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை டேக் செய்திருந்தார். இதையடுத்து வழக்கில் வேகம் சூடுபிடித்தது. ஹிட்ஹப் ஆப்ஸ் மூலம் சல்லிடீல், புல்லி பாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு 'டீல் ஆஃப் தி டே' என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம்பெற்றுள்ளது. செயலியில் மூலம் பெண்கள் ஏலம் விடப்படவில்லை என்றாலும், முஸ்லிம் பெண்களை அவதூறு செய்வதை நோக்கமாக வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மும்பை மேற்கு சைபர் போலீஸார் ஐடி பிரிவுச் சட்டம் 153(ஏ), 153(பி), 295(ஏ), 354(டி) 509, 500, ஐபிசி 67 ஆகிய பிரிவில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 4-வது நபர் இன்று அசாமில் கைதானார். ஏற்கெனவே 21 வயதான மாணவர் மயங்க் ராவல், 19 வயதான ஸ்வேதா சிங் என்ற மாணவி, பொறியியல் மாணவர் விஷால் குமார் ஜா ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்ட இந்த 4 பேரும், விசாரணை நடத்தும்போது அதிகாரிகள் குழப்பமடைய வேண்டும் என்பதற்காக சீக்கியர்கள் பயன்படுத்தும் பெயர்களை தங்களின் ட்விட்டர் கணக்கிற்கு வைத்து குழப்பியுள்ளனர். தங்களின் அடையாளத்தையும் மறைத்து, மற்றவர்களை திசைத்திருப்பியுள்ளனர்.
இந்த விவகாரத்தில் முக்கியத் திருப்பமாக இருந்தது உத்தராகண்டைச் சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவி ஸ்வேதா சிங் என்பவர்தான். இவர்தான் புல்லி பாய் செயலிக்கான ட்விட்டர் தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளார் என்று போலீஸார் தெரிவிக்கின்றனர். 12-ம் வகுப்பு முடித்த ஸ்வேதா சிங், பொறியியல் படிப்பு படிக்க திட்டமிட்டிருந்தார்.
இந்தப் பெண்ணின் தந்தை சமீபத்தில் கரோனாவில் உயிரிழந்தார், தாய் புற்றுநோயால் உயிரிழந்தார். ட்விட்டரில் சீக்கியர்கள் பெயரை பயன்படுத்தியும், கல்சா அமைப்பின் பெயரைப் பயன்படுத்தியும் இரு சமூகத்துக்கு இடையே பதற்றத்தையும், கலவரத்தையும் உருவாக்கும் நோக்கில் ட்வி்ட்டர் கணக்கைத் தொடங்கியுள்ளனர் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து உளவுத்துறையின் ஐஎப்எஸ் பிரிவின் துணை ஆணையர் கேபிஎஸ் மல்ஹோத்ரா கூறுகையில், “புல்லிபாய் செயலி வழக்கில் அசாமில் இன்று கைது செய்யப்பட்டவர் பெயர் நீரஜ் பிஷ்னோய். 21 வயதான பிஸ்னோய் பொறியியல் கல்லூரி மாணவர். இவர்தான் இந்த செயலியை உருவாக்க சதி செய்தவர், ஹிட்ஹப்பில் சென்று ட்விட்டர் கணக்கை தொடங்கி, புல்லி பாய் செயலியையும் உருவாக்கியவர். இவரை அவரின் சொந்த ஊரான ஜோர்ஹட் பகுதியில் கைது செய்தோம்” எனத் தெரிவித்தார்.