

புதுடெல்லி: கரோனா சிகிச்சைக்கு ஆன்டி வைரஸ் மருந்தான மால்னுபிராவிர் (Molnupiravir capsules) மாத்திரைகளை தேசிய கரோனா தடுப்பு அமைப்பு பரிந்துரைக்கவில்லை. அதை வழங்கிட வேண்டாம், அதனால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.
டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் தயாரிக்கும் வாய்வழியாக எடுத்துக்கொள்ளும் மாத்திரையான மால்னுபிராவிர் ஆன்டி வைரஸ் மாத்திரையைத் தயாரிக்கிறது. இந்த மாத்திரையை கரோனா சிகிச்சைக்கு அவசர காலப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடந்த டிசம்பர் 28-ம் தேதி டிசிஜிஐ அனுமதி வழங்கியது.
கரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு ஆக்சிஜன் அளவு 93 சதவீதத்துக்கும் கீழ் செல்லும்போது, இந்த மாத்திரைகளை வழங்கலாம். அதுமட்டுமல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கும் இந்த மாத்திரைகளை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. 200 மி.கிராம் அளவில் இந்த மாத்திரைகள் அட்டைகளில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாத்திரைகளைக் குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள 100 நாடுகளுக்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா சிகிச்சைக்கு வழங்கப்படும் மாத்திரைகளில் மால்னுபிராவிர் மாத்திரைகளை தேசிய கரோனா தடுப்புக் குழு பரிந்துரைக்கவில்லை. மால்னுபிராவில் மாத்திரைகளில் பாதுகாப்பு ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றன. குறிப்பாக மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துதல், தசையில் கோளாறு, எலும்பை சேதப்படுத்துதல் போன்றவை இந்த மாத்திரையால் ஏற்படும்.
ஆதலால், தேசிய கரோனா தடுப்பு மையம் இந்த மாத்திரைகளை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மாத்திரையை கரோனா சிகிச்சைக்கான பட்டியலில் சேர்க்கவில்லை. ஆதலால், மருத்துவர்கள் கவனத்துடன் இந்த மாத்திரையைப் பரிசீலிக்க வேண்டும்.
இந்த மாத்திரை எடுத்துக்கொண்டவர்களுக்கு குழந்தைப் பிறப்பில் சிக்கல் ஏற்படும் என்பதால், அவர்கள் கருத்தடையும் செய்ய வேண்டிய சூழல் ஏற்படலாம். பாலூட்டும் தாய்மார்களுக்கு இந்த மாத்திரையை கரோனா சிகிச்சைக்கு வழங்கினாலும் அது குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாத்திரைகளை மிகவும் அரிதான நேரத்தில், உயிருக்கு ஆபத்து, ஆக்சிஜன் உடலில் குறைந்து வரும் காலங்களில் மட்டுமே மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்''.
இவ்வாறு பார்கவா தெரிவித்தார்.
டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் மால்ப்ளூ என்ற பெயரில் இந்த மாத்திரைகளை 200 எம்ஜி அளவில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டை ரூ.350 மட்டும்தான். 5 நாட்களுக்கு எடுக்கும்போது ரூ.1400 செலவாகும்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 90 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவ சிகிச்சைக்குப் பல்வேறு மருந்துகளை மருந்துவர்கள் பயன்படுத்தக்கூடும் என்பதால், இந்த விளக்கத்தை ஐசிஎம்ஆர் வழங்கியுள்ளது.