

பகூர்: ஜார்க்கண்ட் மாநிலம் சாகிப்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து தேவ்கர் மாவட்டத்தை நோக்கி 40 பயணிகளுடன் தனியார் பேருந்து நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பகூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்பூர் - சாகிப்கஞ்ச் நெடுஞ்சாலையில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 14 பயணிகள், லாரி டிரைவர், கிளீனர் ஆகிய 16 பேர் உயிரிழந்தனர். 26 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுவதால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
விபத்தில் சிக்கிய லாரியானது எரிவாயு உருளைகளை எடுத்துச் சென்றுள்ளது. எரிவாயு உருளைகள் வெடித்திருந்தால், உயிரிழப்பு அதிகரித்திருக்கும் என போலீஸார் தெரிவிக்கின்றனர்.