

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் முதலிடத் தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது.
ஐ.நா.வின் ‘சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலூஷன்ஸ் நெட்வொர்க்’ அமைப்பு மகிழ்ச்சிகரமான உலக நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதற்காக 158 நாடுகளில் ஆய்வு செய்துள்ளது. அதன்படி ஒரு நாட்டின் தனிநபர் வருமானம், ஆரோக்கியம், ஆயுட்காலம், சமூக ஆதரவு, சுதந்திரம் போன்ற மகிழ்ச்சிக்கான விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் டென்மார்க் நாடுதான் உலகிலேயே மிகச்சிறந்த மகிழ்ச்சி யான நாடாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தில் இருந்தது. டென்மார்க்கை அடுத்து 2-வது இடத்தில் சுவிட்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3, 4, 5-வது இடத்தில் உள்ளன.
இதில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு 117-வது இந்தியா இருந்தது. வறுமையில் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ள சோமாலியா நாடு கூட 76-வது இடத்தில் உள்ளது. சீனா (83), பாகிஸ்தான் (92), ஈரான் (105), பாலஸ்தீனம் (108), வங்கதேசம் (110) இடங்களை பிடித்துள்ளன. ஆனால், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இந்தியா பின்தங்கி உள்ளது.
இந்த பட்டியலில் கடந்த ஆண்டை விட மகிழ்ச்சி குறைந்த நாடுகளாக வெனிசுலா, சவுதி அரேபியா, எகிப்து, ஏமன், போஸ் வானா, இந்தியா ஆகிய 10 நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வல்லரசு நாடாக உள்ள அமெரிக்கா 13-வது இடத்தில் உள்ளது. ஆனால், ஆஸ்திரேலியா 9-வது இடத்திலும், இஸ்ரேல் 11-வது இடத்திலும் உள்ளன.
எதனால் மகிழ்ச்சி?
மக்கள் மகிழ்ச்சியாக உள்ள நாடுகளில் பாரபட்சம் அதிகமாக இல்லை. அங்கெல்லாம் சமத்துவம் அதிகமாக உள்ளதுதான் காரணமாக கூறப்படுகிறது.
மக்கள் மகிழ்ச்சியாக இருக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் முக்கிய காரணமாக இருக் கின்றன. மேலும் பாரபட்சம் உள்ள சமுதாயத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழவில்லை என்று ஐ.நா அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மார்ச் 20-ம் தேதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.