Last Updated : 05 Jan, 2022 10:28 PM

 

Published : 05 Jan 2022 10:28 PM
Last Updated : 05 Jan 2022 10:28 PM

73 வயது இணை நோய்கள் கொண்ட ராஜஸ்தான் முதியவர் ஒமைக்ரானால் பலி: மத்திய சுகாதாரத் துறைச் செயலர் தகவல்

சென்னை கிங்ஸ் மையத்தில் ஒமைக்ரான் சிகிச்சை பெறும் நோயாளிகள். படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்.

புதுடெல்லி: ஒமைக்ரான் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 73 வயதான முதியவர் ஒமைக்ரானால் பலியானது உறுதியாகியுள்ளது.

இந்த நபருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஹைபோதைராய்டு பிரச்சினைகள் இருந்துள்ளன. உதய்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதியன்று உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இவர் தான் தொழில்நுட்ப ஆய்வுகளின் அடிப்படையில் ஒமைக்ரானால் உயிரிழந்த நபராக கண்டறியப்பட்டுள்ளார் என மத்திய சுகாதாரத் துறைச் செயலர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி அந்த நபருக்கு கரோனா உறுதியானது. அவர் அண்மைக் காலங்களில் வெளிநாடு சென்றவரும் இல்லை. வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களுடன் தொடர்பில் இருக்கவும் இல்லை. இந்நிலையில் கரோனா தொற்று உறுதியான அவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருக்கிறதா என மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டிருப்பது டிசம்பர் 25 ஆம் தேதி உறுதியானது. மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்த அவர் கடந்த டிச 31 ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் இறந்தார்" எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,135 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ஆகிய கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.

6.3 மடங்கு அதிகரிப்பு: இந்தியாவில் கடந்த 8 நாட்களில் கரோனா தொற்று 6.3 மடங்கு அதிகரித்துள்ளதாக லாவ் அகர்வால் தெரிவித்தார். பாசிடிவிட்டி விகிதமானது டிசம்பர் 29ல் 0.79% என்று இருந்த நிலையில் ஜனவரி 5 நிலவரப்படி 5.03 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்த மக்கள் தொகையில் 65.9% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜனவரி 3லிருந்து 15 வயது முதல் 18 வயதுடையோருக்க்கான தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இந்த வயது வரம்பில் 7.40 கோடி பேர் உள்ளனர். இவர்களில் இதுவரை 1 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x