

புதுடெல்லி: கோவாக்சின் தடுப்பூசி செலுத்திய பின்னர் வலி நிவாரணிகள், காய்ச்சல் மாத்திரை கொடுக்க வேண்டிய அவசியமில்லை என அத்தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.
சில தடுப்பூசி மையங்களில் சிறாருக்கு மூன்று பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்பட்டு அவற்றை முறையே மூன்று வேளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் பாரத் பயோடெக் நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்நிறுவனம் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "கோவாக்சின் தடுப்பூசிக்குப் பின்னர் பாராசிட்டமால், வலி நிவாரணிகள்" தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 30,000 தனிநபர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தி மேற்கொண்ட கிளினிக்கல் பரிசோதனையில் 10 முதல் 20 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்க விளைவுகள் ஏற்பட்டன. அவையும் மிக லேசான அறிகுறிகளாக இருந்தன. ஒன்றிலிருந்து, இரண்டு நாட்களில் அந்த பக்கவிளைவுகளும் மருந்து ஏதும் கொடுக்காமலேயே நீங்கின என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 12 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வழங்க அனுமதி கொடுத்தது.
இதனையடுத்து, ஜனவரி 3 தொடங்கி 15 வயது முதல் 18 வரையிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதன்படி இந்த வயதில் உள்ளவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, இந்த வயது வரம்பில் உள்ள 85 லட்சம் பயனாளர்களுக்கும் மேலானோர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.