

புதுடெல்லி: டெல்லியை கரோனா மூன்றாவது அலை தாக்கியுள்ளது, டெல்லியில் இன்று சுமார் 10,000 புதிய கோவிட் தொற்று எண்ணிக்கை பதிவாகும் என்று அம்மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துவருகிறது. கடந்த அக்டோபர் மாதத்துக்குப்பின் தினசரி தொற்று 20 ஆயிரத்துக்குமேல் சென்றுள்ளது. இதில் கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவலும் இருப்பதால் பரவல் அதிகரித்து வருகிறது.
டெல்லியில் கடந்த சில வாரங்களாகவே கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு விதித்துள்ளது. இரவுநேர ஊரடங்கு, பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.
டெல்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சியின் நிறுவனருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கோவிட்-19 பரவுவதை கட்டுப்படுத்த டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்துள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,481 பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் டெல்லியில் இன்று சுமார் 10,000 புதிய கோவிட் தொற்று எண்ணிக்கை பதிவாகும் என டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியதாவது:
ஒவ்வொரு 100 சோதனைகளுக்கும் நேர்மறை சோதனை செய்யும் நபர்களின் எண்ணிக்கை தேசிய தலைநகரில் 10 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று நேர்மறை விகிதம் 8.3 சதவீதமாக இருந்தது, திங்களன்று 6.46 சதவீதத்தில் இருந்து குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும்.
இந்தியாவில் மூன்றாவது அலை உருவாகியுள்ளது. டெல்லியை கரோனா மூன்றாவது அலை தாக்கியுள்ளது. டெல்லியில் வசிக்கும் மக்கள் மிகவும் தொற்றுநோயான ஒமைக்ரானின் அறிகுறிகள் லேசானதாகத் தோன்றினாலும், கோவிட் தொடர்பான அனைத்து நெறிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
தனியார் மருத்துவமனைகளில் 40 சதவீத படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. டெல்லியில் சுகாதார கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி வருகிறோம்.
அனைத்து மாதிரிகளையும் வரிசைப்படுத்துவது சாத்தியமில்லை என்பதால், இப்போது டெல்லியில் இருந்து 300-400 மாதிரிகள் மட்டுமே மரபணு வரிசைப்படுத்தலுக்கு அனுப்பப்படுகின்றன.
கோவிட் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று சுமார் 90,000 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அரசு புதிய தடைகளை அறிவித்தபோதிலும் டெல்லியில் நேற்று 5,481 கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன.
டெல்லியில் கோவிட் தொற்று திடீரென அதிகரித்து வருவதைத் தடுக்க வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும். கட்டுப்பாடுகளின் கீழ், தனியார் அலுவலகங்கள் 50 சதவீத திறனில் மட்டுமே செயல்பட வேண்டும்.
நீண்ட வரிசைகள் மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பேருந்துகள் மற்றும் டெல்லி மெட்ரோ முழு அளவில் இயக்கப்படும். கவலைப்பட ஒன்றுமில்லை. அதேசமயம் முககவசங்களை உங்கள் கவசமாக்கிக் கொள்ளுங்கள்.
டெல்லியில் ஜனவரி 15-ம் தேதிக்கு பிறகு ஒரு நாள் கரோனா தொற்று எண்ணிக்கை 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை உயரக்கூடும். மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களும் அதிகரிக்கக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.