புத்தாண்டு தினத்தன்று கல்வான் பள்ளத்தாக்கில் தேசியக் கொடி ஏற்றிய இந்திய வீரர்கள்

புத்தாண்டு தினத்தன்று கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நமது தேசியக் கொடியை பறக்கவிட்ட இந்திய ராணுவ வீரர்கள்.படம்: பிடிஐ
புத்தாண்டு தினத்தன்று கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் நமது தேசியக் கொடியை பறக்கவிட்ட இந்திய ராணுவ வீரர்கள்.படம்: பிடிஐ
Updated on
1 min read

புதுடெல்லி: புத்தாண்டு தினத்தன்று லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய தேசியக் கொடியை நமது ராணுவ வீரர்கள் ஏற்றினர்.

லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயன்றனர். ஆனால், அவர்களை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே மோதல்போக்கு நிலவி வந்தது. இந்த சூழலில், அதே ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்குள் நுழைந்த சீனராணுவத்தினர் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றனர். அப்போது இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 பேர் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் விளைவாக கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியது. அதேபோல, சில பகுதிகளில் இருந்து இந்தியாவும் தனது படையை விலக்கிக் கொண்டது.

எனினும், இந்தியாவுக்கு சொந்தமான ஹாட் ஸ்பிரிங்ஸ், தேஸ்பாங் ஆகிய பகுதிகளில் இருந்து சீன ராணுவம் வெளியேற மறுத்து வருகிறது. இதுதொடர்பாக சீனாவுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதனிடையே, இந்தியாவுக்கு சொந்தமான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவ வீரர்கள் அவர்கள் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றிய வீடியோ கடந்தசில தினங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த இந்திய ராணுவம், கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியாவுக்கு சொந்தமான பகுதியில் சீனாவின் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை எனத் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் புத்தாண்டு தினத்தன்று நமது மூவர்ணக் கொடியை இந்தியராணுவ வீரர்கள் ஏற்றி மரியாதை செலுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

- பிடிஐ

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in