

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் இந்திய – சீன எல்லைக்கு மிக அருகில் பான்காங் ஏரியில் சீனா பாலம் கட்டுவதாக செய்தி வெளியாகியுள்ளது. பான்காங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை இணைக்கும் வகையிலான இந்தப் பாலப் பணி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடந்து வருவதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது ட்விட்டர் பதிவில் மேற்கோள் காட்டி, “பிரதமரின் மவுனத்தால் எழுந்துள்ள கூச்சல் காதடைக்கச் செய்கிறது. நமது நிலம், நமது மக்கள், நமது எல்லைகள் சிறப்புக்கு உரியவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. கிழக்கு லடாக்கில் சீனாவுடனான எல்லைப் பிரச்சினையை மத்திய அரசு கையாளும் விதம் குறித்து காங்கிரஸ் கட்சியும் ராகுல் காந்தியும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.