

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,711 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரம்: நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இதேபோல் நாட்டில் 23 மாநிலங்களில் ஒமைக்ரான் புதிய வகை வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் மட்டும் 510 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் மட்டும் 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கடுத்த நிலையில், டெல்லியில் 351 பேருக்கு ஒமைக்ரான் பாதித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 123 பேருக்கு புதிதாக ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய 5 நாட்களை விட குறைவாகும். எனினும் ஒமைக்ரான் பாதிப்பு 1,711 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் ஒரேநாளில் 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 152 பேருக்கு ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல் குஜராத், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்தது. எனினும், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒமைக்ரான் தொற்று ஏற்பட்டதாக எந்த பதிவும் இல்லை.
கரோனா பாதிப்பு
அதேநேரம் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 33,750 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது அதற்கு முந்தைய நாளை விட 22.5 சதவீதம் அதிகம். அவர்களையும் சேர்த்து சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 லட் சத்து 45,582 ஆக உயர்ந் துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 123 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களையும் சேர்த்து இது வரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 81,893 ஆகியுள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 0.42 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அதேபோல் குணமடை வோர் சதவீதம் 98.20 ஆக உள்ளது. மொத்தம் 3 கோடியே 42 லட்சத்து 95,407 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் வரை 2 சதவீதத்துக்கும் கீழ் இருந்த தினசரி தொற்று சதவீதம் தற்போது 3.83 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு மத்திய சுகாதாரத் துறை புள்ளிவிவரத் தில் கூறப்பட்டுள்ளது.
- பிடிஐ