

ஹைதராபாத்: தெலங்கானாவில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜக விற்கும் இடையே கடும் அரசியல் போட்டி நிலவி வருகிறது. இடைத்தேர்தல்களில் வெற்றி, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் ஹைதராபாத் மாநகராட்சியில் ஆளும் கட்சிக்கு அடுத்தப்படியாக அதிக வார்டுகளை கைப்பற்றியது போன்ற பாஜகவின் படிப்படியான வளர்ச்சிக்கு மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சய்யும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
பண்டி சஞ்சய்யும் தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவை தீவிரமாக விமர்சித்து வருகிறார். இதற்கு மக்களிடையேயும் நல்லவரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் இடம் மாற்றத்திற்காக தெலங்கானா அரசு எண். 317 சட்ட மசோதாவை கொண்டு வந்தது. அரசு ஊழியர்களை பாதிக்கும் இந்த மசோதாவில் சில மாற்றங்களை செய்ய வலியுறுத்தி பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் தலைமையில் பாஜகவை சேர்ந்த மேலும் 12 பேர் கரீம் நகரில் எம்.பி. அலுவலகம் முன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சஞ்சய்உட்பட 5 பேரை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கரீம் நகர் போலீஸார் கைது செய்து நேற்று கரீம் நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
ஆனால், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டதால், பண்டி சஞ்சய் உட்பட 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.