

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராம்நகரில் நேற்று பாபாசாகேப் அம்பேத்கர், கெம்பே கவுடா சிலை திறப்பு விழா நடைபெற்றது. முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர்கள் அஷ்வத் நாராயண், பைரத்தி பசவராஜ், ராம்நகர் தொகுதி காங்கிரஸ் எம்பி டி.கே.சுரேஷ், எம்எல்ஏ அனிதா குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. டி.கே.சுரேஷ் பேசுகையில், '' பசவராஜ் பொம்மை முதல்வராக பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகும் நிலையில் முதல் முறை ராம்நகருக்கு வந்துள்ளார். டெல்லி, உ. பி.வடகர்நாடகாவுக்கு பல முறை சென்ற இவர் ஏன் எனது தொகுதிக்கு வரவில்லை. இந்த தொகுதிக்கு பாஜக ஆட்சி செய்த சாதனைகளை பட்டியலிட முடியுமா?'' என்றார்.
முதல்வரை விமர்சித்ததால் பாஜக.வினர் கூச்சல் எழுப்பினர். பின்னர் உயர் கல்வித்துறை அமைச்சர் அஷ்வத் நாராயண் பேசுகையில், '' முதல்வர் பசவராஜ் பொம்மை ராம்நகருக்கு நலத்திட்டங்களை அறிவிக்க வந்திருக்கிறார். அவரை அரசு நிகழ்ச்சியில் நாகரீகமற்ற முறையில் விமர்சிப்பது சரி அல்ல. நல்ல ஆண்மகனாக இருந்தால் காங்கிரஸார் பேசுவதை செயலில் காட்ட வேண்டும்''என ஆவேசமாக பேசினார்.
இதனால் கோபமடைந்த காங்கிரஸ் எம்பி டி.கே.சுரேஷ் அமைச்சர் அஷ்வத் நாராயணை வேகமாக அடிக்க சென்றார். அப்போது இருவருக்கும் மேடையிலே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. காங்கிரஸின் உள்ளாட்சி நிர்வாகிகள் அமைச்சர் அஷ்வத் நாராயணை தாக்க முயன்றனர். பின்னர் மேடையில் இருந்த ஒலிப்பெருக்கியை தூக்கியெறிந்தனர்.
பின்னர் காங்கிரஸார் மேடையிலேயே முதல்வருக்கு எதிராகவும், பாஜகவினருக்கு எதிராகவும் முழக்கம் எழுப்பினர். காங்கிரஸ் தொண்டர்கள் மேடை மீது நாற்காலி, காலி பாட்டில்களை தூக்கி வீசினர். பின்னர் போலீஸார் டி.கே.சுரேஷ் உள்ளிட்ட காங்கிரஸாரை அப்புறப்படுத்தினர்.
இதனிடையே முதல்வர் பசவராஜ் பொம்மை, "பாபாசாகேப் அம்பேத்கரையும் கெம்பே கவுடாவையும் கவுரவிப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறோம். நம்முடைய கோபத்தால் அவர்களுக்கு அவமரியாதை ஏற்படுத்தி விடக்கூடாது''எனக்கூறி கூட்டத்தினரை அமைதிப்படுத்தினார்.
கர்நாடகாவில் முதல்வர் முன்னிலையிலேயே பாஜக அமைச்சருக்கும் காங்கிரஸ் எம்பிக்கும் ஏற்பட்ட மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.