

ஏமன் நாட்டிலிருந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட கேரள மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கடந்த புனித வெள்ளியன்று சிலுவையில் அறைந்து படுகொலை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து பெங்களூருவில் உள்ள செலேசிய சபை சார்பில் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளிக்கப்பட்ட பேட்டியில், "பாதிரியார் டாம் உழுநலில் கடந்த 4-ம் தேதியன்று கடத்தப்பட்டார். இந்நிலையில் அவரை தீவிரவாதிகள் சிலுவலையில் அறைந்து கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், உறுதிப்படுத்த எங்களிடம் போதிய ஆதாரம் இல்லை. எங்களுக்கு பாதிரியார் டாம் குறித்து உறுதிபடுத்தப்பட்ட தகவலி கிடைத்தவுடன் அதிகாரபூர்வமாக அறிவிப்போம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'உண்மையாக இருக்கலாம்'
இதற்கிடையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த கத்தோலிக்க பாதிரியார் பால் தெலாகட் தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "பாதிரியார் டாம் கடந்த புனித வெள்ளியன்று சிலுவையில் அறைந்து ஐ.எஸ். தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக சர்வதேச அளவிலான கிறிஸ்தவ செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாதிரியார் டாம் தொடர்பான அண்மைச் செய்திகளைப் பார்க்கும்போது அவர் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டது உண்மையாகவே இருக்கும் எனத் தோன்றுகிறது" எனக் கூறியுள்ளார்.
கடந்த 4-ம் தேதி ஏமனில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 4 பேர் கன்னியாஸ்திரிகள். மிசனரிஸ் ஆஃப் சேரிட்டி சபையைச் சேர்ந்த அந்த நால்வரில் ஒருவர் இந்தியர் ஆவார்.