

புதுடெல்லி: 15 வயது முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி இன்று நாடுமுழுவதும் தொடங்கியது. முதல் நாளான இன்று இரவு 8 மணி நிலவரப்படி 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
நாட்டில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்துவருவதையடுத்து, பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி செலுத்தவும் மத்திய அரசு முடிவு செய்தது.
இதுதொடர்பாக கிறிஸ்துமஸ் பண்டிகையன்று மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022 ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுள்ள பிரிவினருக்கு தடுப்பூசியும், 10ம் தேதி முதல் இணை நோய்கள் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோர், முன்களப் பணியாளர்களுக்கு முன்னெச்சரி்க்கை டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது என்று கூறினார்
இதன்படி 15 முதல் 18 வயதுள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள கோவின் தளத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் தங்கள் விவரங்களை பதிவிட்டு முன்பதிவு செய்யலாம். 2007 மற்றும் அதற்கு முன்பு பிறந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்கள். இவர்கள் கோவின் தளத்திலும் பதிவு செய்யலாம் அல்லது நேரடியாகவும் தடுப்பூசி மையத்துக்குச் சென்று பதிவிடலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை நாடுமுழுவதும் இப்பணி தொடங்கியது. முதல் நாளான இன்று இரவு 8 மணி நிலவரப்படி 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
வெல் டன் யங் இந்தியா! சிறார் தடுப்பூசி திட்டம் குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், "வெல் டன் யங் இந்தியா! 15 முதல் 18 வயது உடையோருக்கான தடுப்பூசித் திட்டத்தில் முதல் நாளான இன்றிரவு 8 மணி வரை 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்தியாவின் தடுப்பூசித் திட்டத்திற்கு மற்றுமொரு வெற்றி" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறாரின் எண்ணிக்கை 33 லட்சம். இவர்களில் 27 லட்சம் பேர் பள்ளி, கல்லூரிகளில் பயில்கின்றனர். எனவே அவர்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளிலேயே தடுப்புசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.