

புதுடெல்லி: காலாவதியான தடுப்பூசிகள் செலுத்தப்படுவதாக வெளியான தகவல்களை அடிப்படை ஆதாரமற்றது என மத்திய அரசு புறந்தள்ளியுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய அளவிலான கோவிட் 19 தடுப்பூசி இயக்கத்தில், காலாவதியான தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுவதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது அரைகுறையான தகவல்களின் அடிப்படையில் வெளியான தவறான மற்றும் தவறாக வழிநடத்தக்கூடிய செய்தியாகும்.
பாரத் பயோடெக் நிறுவனம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அந்த நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியின் ஆயுட்காலத்தை 9 மாதங்களில் இருந்து, 12 மாதங்களாக நீட்டித்து மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, 25 அக்டோபர் 2021 அன்று உத்தரவிட்டுள்ளது.
இதேபோன்று, கோவிஷீல்டு தடுப்பூசியின் ஆயுட்காலத்தையும் 6 மாதத்திலிருந்து 9 மாதங்களாக நீட்டித்து 22 பிப்ரவரி 2021 அன்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அளித்த புள்ளிவிவரங்களை முறையாக ஆய்வு செய்து, விரிவான பகுப்பாய்வுகளுக்கு பிறகே இந்த தடுப்பூசிகளின் ஆயுட்காலம் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பால் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.