

சண்டிகர்: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ பல்விந்தர் சிங் லட்டி கடந்த வாரம் பாஜகவில் சேர்ந்த நிலையில் திடீரென யு டர்ன் அடித்து, இந்த வாரம் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளுக்கும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக இருந்த அமரிந்தர் சிங்கிற்கும், காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் தொடர்ந்து மோதல் நிலவியது.
இருவருக்கும் இடையே மோதல் உச்ச கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து முதல்வர் பதவியிலிருந்து அமரிந்தர் சிங் விலகினார். இதையடுத்து, புதிய முதல்வர் சரண்ஜித் சன்னி நியமிக்கப்பட்டார்.
காங்கிரஸ் தலைமையுடன் அதிருப்தியுடன் இருந்த அமரிந்தர் சிங், இருமுறை பாஜக மூத்த தலைவர், உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துத் திரும்பியதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அமரிந்தர் சிங், பஞ்சாப் மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினார். அடுத்த ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து முறைப்படி அமித் ஷா, தேசியத் தலைவர் நட்டா ஆகியோரைச் சந்தித்து அமரிந்தர் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதனால் வழக்கம்போல் ஆளும் கட்சியிலிருந்து எம்எல்ஏக்களை இழுப்பதும், எதிர்க்கட்சியிலிருந்து நிர்வாகிகளை இழுப்பதும் என கட்சி மாறும் படலம் தொடங்கிவிட்டது. அந்த வகையில் ஏற்கெனவே காங்கிரஸ் நிர்வாகிகள் பலர், எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துவிட்டனர்.
இந்நிலையில் ஸ்ரீ ஹர்கோவிந்த்பூர் தொகுதி எம்எல்ஏ பல்விந்தர் சிங் லட்டி, குவாதியன் தொகுதி எம்எல்ஏ பதேசிங் பஜ்வா, முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் மோங்கியா ஆகியோர் கடந்த மாதம் 28-ம் தேதி பாஜகவில் சேர்ந்தனர். இவர்கள் மூவரும் மத்திய அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். பஞ்சாப் மாநிலத் தேர்தல் பொறுப்பாளராகவும் கஜேந்திர ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த வாரம் பாஜகவில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ பல்விந்தர் சிங் இன்று திடீரென மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்த 6 நாட்களில் விலகி காங்கிரஸ் கட்சியில் பல்விந்தர் சிங் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.