Published : 15 Mar 2016 02:57 PM
Last Updated : 15 Mar 2016 02:57 PM

தேசிய மேல்முறையீடு நீதிமன்றம் குறித்து விவாதிக்க அரசியல் சாசன அமர்வு: உச்ச நீதிமன்றம் முடிவு

நாட்டில் முதல் முறையாக தேசிய மேல்முறையீடு நீதிமன்றம் அமைக்கும் பொருட்டு விவாதிக்க 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை நியமிக்க உச்ச நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது.

இது குறித்து ஏப்ரல் 4-ம் தேதி கேள்விகளை தயாரிக்க அட்டார்னி ஜெனரல் முகுல் ரொஹாட்கி மற்றும் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆகியோரிடம் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

தேசிய மேல்முறையீடு நீதிமன்றம் சாத்தியமில்லாதது, விரும்பத்தக்கதுமல்ல என்று முகுல் ரொஹாட்கி கருதுகிறார், ஆனால் கே.கே.வேணுகோபால் இதற்கு ஆதரவாக வாதிடும் போது, “6 ஆண்டுகால விவாதத்திற்குப் பிறகு அயர்லாந்து நாட்டில் தேசிய மேல்முறையீடு நீதிமன்றம் நிறுவப்பட்டது” என்றார்.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.வசந்தகுமார், தேசிய மேல்முறையீடு நீதிமன்றத்தின் தேவையை வலியுறுத்தி செய்திருந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.தாக்கூர், மற்றும் யு.யு.லலித் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் இது 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்கும், அதன் பிறகு இந்த அமர்வு அரசியல் சாசன அமர்விடம் ஒப்படைக்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

அதாவது சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளில் இறுதி நீதி வழங்கும் தேசிய மேல்முறையீடு நீதிமன்றம் அதன் பிராந்திய கிளைகளுடன் அமைக்கக் கோரிய வசந்தகுமாரின் மனுவை பிப்ரவரி 27-ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் கிளைகளுடன் தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் கிரிமினல், சிவில், தொழிலாளர் வழக்குகள் மற்றும் வருவாய் விவகார வழக்குகள் ஆகியவற்றில் தீர்ப்பாயங்கள் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் மேல்முறையீடுகளை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கும் என்று இந்த மனுவில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய மேல்முறையீட்டு நீதிமன்றம் அமைக்கப்பட்டால், உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனச் சட்டம் மற்றும் பொதுச்சட்டம் குறித்த வழக்குகளை மட்டும் கையாளும் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x