Published : 03 Jan 2022 07:00 AM
Last Updated : 03 Jan 2022 07:00 AM

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி: இந்தியா அனுப்பி வைத்தது

ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மேலும் 5 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசியை இந்திய அரசு அனுப்பி வைத்துள் ளது.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி நேற்றுமுன்தினம் ட்விட்டரில், “ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையில் 2-ம் கட்டமாக 5 லட்சம் டோஸ் கோவாக்சின் கரோனா தடுப்பூசி விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த மருந்து காபூலில் உள்ள இந்திரா காந்தி மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. வரும் நாட்களில் மேலும் 5 லட்சம் டோஸ் தடுப்பூசி அனுப்பி வைக்கப்படும்” என பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து இந்தியாவுக்கான ஆப்கன் தூதர் பரித் மமுன்ட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆப்கன்மக்களின் உயிரைக் காப்பதற்காக புத்தாண்டின் முதல் நாளில் கரோனா தடுப்பூசியை அனுப்பி வைத்துள்ள இந்தியாவுக்கு நன்றி.ஆப்கன் மக்களுக்கு இந்த ஆண்டுஅமைதி மற்றும் வளத்தை வழங்குவதாக இருக்கும் என நம்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.

நிதி நெருக்கடியில் ஆப்கன்

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான் அமைப்பினர் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் பல்வேறு உலக நாடுகள் தலிபான்களை அங்கீகரிக்க மறுத்து வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

இந்நிலையில், கடந்த மாதம் அந்நாட்டுக்கு 1.6 டன் மருந்து பொருட்களை உலக சுகாதார அமைப்பின் மூலம் இந்தியா அனுப்பி வைத்தது.மேலும் சில மருந்து பொருட்கள் மற்றும் கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்களை விரைவில் அனுப்பி வைக்க உள்ளதாகவும் இதுகுறித்து ஐ.நா.முகமைகளுடன் பேசி வருவதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x