

தேசத்துரோக குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்றது குறித்து தனக்கு வருத்தங்கள் இல்லை, பெருமையாகவே கருதுகிறேன் என்று ஜே.என்.யூ. மாணவர் உமர் காலித் தெரிவித்துள்ளார்.
நேற்று உமர் காலித் மற்றும் அனிர்பான் பட்டாச்சாரியா ஆகியோருக்கு டெல்லி அமர்வு நீதிமன்றம் 6 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் சிறையிலிருந்து விடுதலையாகி ஜே.என்.யூ. திரும்பிய உமர் காலித் கூறியதாவது:
இந்த குறிப்பிட்ட வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து எங்களுக்கு வருத்தங்கள் எதுவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உண்மையில் நாங்கள் தேசத்துரோக வழக்கில் சிறை சென்றதற்காக பெருமையே அடைகிறோம், இதே சட்டத்தின் கீழ்தான் சமூக செயல்பாட்டாளர்களான அருந்ததி ராய், விநாயக் சென் போன்றோர்களும் சிறை சென்றனர்.
தங்களது குரலை எழுப்பியதற்காக சிறைத் தண்டனை அளிக்கப்பட்டவர்கள் பட்டியலில் எங்கள் பெயர்களும் சேர்க்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்தது குறித்து எனக்கு வெட்கம் எதுவும் இல்லை. கிரிமினல்கள் அதிகாரத்தில் இருக்கின்றனர், சிறையில் இருப்பவர்கள்தான் தங்கள் குரல்களை உயர்த்த வேண்டியுள்ளது.
பேச்சுச் சுதந்திரம் அபாயத்திலிருப்பதாக நான் கருதவில்லை. அது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளது. பிரவிண் தொகாடியா, யோகி ஆதித்யநாத் ஆகியோர்களிடத்தில் பேச்சுச் சுதந்திரம் உள்ளது.
நான் இஸ்லாத்தை பின்பற்றியவனில்லை, ஆனால் நான் இஸ்லாமிய பயங்கரவாதி என்று அழைக்கப்பட்டேன். இது என்னைப்பற்றிய விசாரணை அல்ல, ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதான விசாரணை. நான் கேட்கிறேன், நான் இஸ்லாத்தை கடைபிடித்தால்தான் என்ன? நான் அஸம்காரிலிருந்து வந்து ஸ்கல் கேப் அணிந்தால் என்ன? ஆனால் அது ஒன்றே போதும் என்னை பயங்கரவாதி என்று அழைக்க.
வரி செலுத்துவோர் பணம் விரயமாகிறது என்று கவலை எழுப்புவோருக்கு நாங்கள் தெரிவிக்க விரும்புவது என்னவெனில் சிறையிலிருந்து வந்த நாங்கள் தற்போது படிக்கப்போவதில்லை. எங்களை சிறைக்கு அனுப்பியதன் மூலம் எங்கள் மீது பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. நாங்கள் அதனை போராடுவதன் மூலம் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு ஜே.என்.யூ. மாணவர்கள் முன்னிலையில் பேசினார் உமர் காலித்.