

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை 3 நாட்கள் ‘தர்ம சன்சத்’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லி பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் அஷ்வினி உபாத்யாய், வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி (முஸ்லிம் மதத்தில் இருந்து கடந்த மாதம் இந்து மதத்துக்கு மாறியவர்.) மற்றும் இந்து தலைவர்கள் பங்கேற்றனர்.
அந்த மாநாட்டில் பேசிய இந்து மத ஆதரவாளர்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராகவும், வன்முறைகளை தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கார்வால் டிஐஜி கரண் சிங் நக்யால் நேற்று கூறும்போது, ‘‘தர்ம சன்சத் மாநாட்டில் வெறுப்பு பேச்சு பேசப்பட்டது குறித்து விசாரிக்க, 5 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
இதற்கிடையில் ஹரித்துவார் போலீஸார், தர்ம சன்சத் மாநாட்டில் வெறுப்புணர்வு பேச்சு பேசியது குறித்து எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அதில், தரம் தாஸ், அன்னபூர்ணா, வசீம் ரிஸ்வி என்கிற ஜிதேந்திர தியாகி , நரசிங்கானந்த் மற்றும் சாகர் சிந்துராஜ் மற்றும் சிலரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.