Published : 03 Jan 2022 08:06 AM
Last Updated : 03 Jan 2022 08:06 AM

கரோனா 2-வது அலையில் கற்ற பாடங்களைக் கொண்டு ஒமைக்ரானை எதிர்த்துப் போரிட வேண்டும்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் வலியுறுத்தல்

கரோனா 2-வது அலையில் கற்றபாடங்களைக் கொண்டு ஒமைக்ரானை எதிர்த்து நாம் போரிடவேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் எல். மாண்டவியா தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள், அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகள் ஆகியோருடன் நேற்றுமத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார்.

நாட்டில் ஒமைக்ரான் அச்சுறுத்தல் மற்றும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டுமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இந்த கூட்டத்தில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தின் போது நாட்டில் 15 முதல் 18 வயது வரை யிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த உள்ள நிலையில் அது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: கரோனா பரிசோதனை, பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய நான்கு செயல்முறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இதற்கு முன் கரோனாவுக்கு எதிராக கடுமையாக போர்புரிந்துள்ளோம். கடந்த காலங்களில் குறிப்பாக கரோனா 2-வதுஅலையின் போது கற்ற பாடங்களை பயன்படுத்தி ஒமைக்ரானுக்கு எதிராக போராட வேண்டும். ஒமைக்ரான் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஈடுபடவேண்டும்.

அதிக எண்ணிக்கையில் கரோனா பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதனை கையாளும் விதத்தில் சுகாதார கட்டமைப்பை தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

மாநிலங்கள் கரோனா கால நிதியை முறையாக பயன்படுத்த வேண்டும். மாநிலங்கள் தங்களுக்கு தேவைப்படும் தடுப்பூசிகளை முன்கூட்டியே தெரியப்படுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள மாநிலங்கள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வீடு வீடாகசென்று கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இந்தியாவில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

கூட்டத்தின் போது நாட்டில் மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளைமேம்படுத்துதல், கரோனாவை முறையாக கையாள பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், கரோனா சங்கிலியை உடைத்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x