முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை கூட்டத்தை நீட்டிக்க எதிர்க்கட்சிகள் தயார்

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை கூட்டத்தை நீட்டிக்க எதிர்க்கட்சிகள் தயார்
Updated on
1 min read

மாநிலங்களவையில் சில முக்கியமான மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியை 2 நாட்களுக்கு நீட்டிக்க அரசு விரும்பினால் அதற்கு ஆதரவு அளிப்போம் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.

ஆனால் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் சில கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மக்களவையில் ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட எதிரி சொத்து (திருத்த மற்றும் சரிபார்த்தல்) மசோதாவை மாநிலங்களவையில் தாக்கல் செய்ய அனுமதிக்குமாறு நாடாளுமன்ற விவகாரத் துறை இணை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கோரிக்கை வைத்தார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் பற்றிய விவாதத்தை முதலில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகு மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதுகுறித்து, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசும்போது, “மசோதா தாக்கல் செய்வதற்காக ரயில்வே மற்றும் பொது பட்ஜெட் குறித்த விவாத நேரத்தைக் குறைக்கக் கூடாது. முக்கிய மசோதாக்களை அரசு நிறைவேற்ற விரும்பினால், கூட்டத்தொடரை 2 நாட்களுக்கு நீட்டிக்கலாம். அதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்றார்.

இதுகுறித்து நக்வி கூறும்போது, “மாநிலங்களவை கூட்டத்தை நீட்டிக்க அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க மறுக்கின்றன. இதுகுறித்து அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது” என்றார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நாளை முடிவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in