

புதுடெல்லி: கரோனா பெருந்தொற்று காலத்தில் தட்கல், ப்ரீமியம் தட்கல் வாயிலாக ரூ.1000 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
'தட்கல் கட்டணங்கள் குறித்து பொதுமக்களிடம் பதட்டமும் வேறு வழியின்றி செலுத்தப்படவேண்டிய கட்டணம் என்ற நிலைதான் உள்ளது' என்று சமீபத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு ரயில்வே செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்திருந்தது,
அதில் ''தட்கல் டிக்கெட்டுகளுக்கு விதிக்கப்படும் கட்டணங்கள் கொஞ்சம்கூட நியாயப்படுத்த முடியாதவை என்றும், குறிப்பாக பொருளாதார ரீதியாக நலிவடைந்த மற்றும் மிகக் குறுகிய தூரத்திற்கு அவர்களின் உற்றார் உறவினர்களை சந்திக்கவும். அவசர அவசரமாக பயணிக்க வேண்டிய பயணிகள் மீது பெரும் சுமையை ஏற்படுத்துகிறது' என்று தெரிவித்திருந்தது.
எனவே பயணிகள் பயணம் செய்த தூரத்திற்கான விகித கட்டணத்தை நிர்ணயித்து நடவடிக்கைகளை ரயில்வே அமைச்சகம் வகுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்தது.
ராஜ்தானிகள், சதாப்திகள் மற்றும் துரந்தோக்களின் கட்டணங்கள் பட்ஜெட் விமானங்களை ஒப்பிடும்போது ஏறக்குறைய சமமாகவும் சில சமயங்களில் அதைவிட அதிகமாகவும் உள்ளன. இந்த விலை நிர்ணயம் சற்றே பாரபட்சமானது என்று குழு கூறியது.
மூன்றுவிதமான தட்கல் கட்டணங்கள்: கடைசி நிமிடத்தில் முடிவெடுத்து அவசரஅவசரமாக புறப்பட தயாராகும் பயணிகளிடம் ரயில்வேதுறையால் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. அவை 1) தட்கல் கட்டணம், 2) பிரீமியம் தட்கல் கட்டணம், 3) ஆர்ஏசி உள்ளிட்ட உறுதிபடுத்தும் பதிவுகளுக்கான டைனமிக் கட்டணம் ஆகும்.
தட்கல் டிக்கெட் கட்டணங்கள், இரண்டாம் வகுப்புக்கான அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதமும், மற்ற அனைத்து வகுப்புகளுக்கான அடிப்படைக் கட்டணத்தில் 30 சதவீதமும் குறைந்தபட்சம் மற்றும் அதிகபட்சம் என்ற விகிதத்தில் கட்டணத்தின் சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் 2014 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிரீமியம் பதிப்பின் கீழ், 50 சதவீத தட்கல் கோட்டா டிக்கெட்டுகள் டைனமிக் கட்டண முறையைப் பயன்படுத்தி விற்கப்படுகின்றன.
ஆர்டிஐ தகவல்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் இதுகுறித்து விவரங்களைப் பெற ஆர்டிஐக்க மனு தாக்கல் செய்தார். அவருக்கு பதிலளித்த ரயில்வே, ''2021-22 நிதியாண்டு செப்டம்பர் வரை, பயணிகளிடம் டைனமிக் கட்டணங்கள் மூலம் ரூ.240 கோடியும், தட்கல் டிக்கெட் மூலம் ரூ.353 கோடியும், பிரீமியம் தட்கல் கட்டணங்கள் மூலம் ரூ.89 கோடியும் வருமானம் பார்க்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் கோவிட் காரணமாக ஆண்டு முழுவதும் அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தாலும் கூட தட்கல் டிக்கெட் கட்டணங்கள் மூலம் ரூ. 403 கோடியும், பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகளின் மூலம் ரூ.119 கோடியும், டைனமிக் கட்டணங்கள் மூலம் ரூ. 511 கோடியும் ரயில்வே சம்பாதித்தது,
இருக்கை முன்பதிவு அட்டவணையை இறுதி செய்த பிறகு காத்திருப்புப் பட்டியலில் இருந்த 52 லட்சத்துக்கும் அதிகமானோர் நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் ரயில்களில் பயணிக்க முடியவில்லை என்றும் தரவு காட்டுகிறது.
சுமார் 32,50,039 PNRகளுக்காக 52,96,741 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர், இந்த நிதியாண்டின் செப்டம்பர் வரை விளக்கப்படங்களை தயாரித்து காத்திருக்கும் நிலையில் இருந்ததால் தானாக ரத்து செய்யப்பட்டது,
பயணி ஒருவரின் கருத்து: ஒவ்வொரு ஆண்டும் பிஹாரில் உள்ள தனது பெற்றோரைப் பார்க்கச் செல்லும் சுஜீத் ராய் கூறுகையில், பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்ய போதுமான ரயில்கள் இல்லாததுதான் பிரச்சினை. பிரீமியம் கட்டணத்தை வாங்கக்கூடியவர்கள், தட்கல் டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு பணத்தைச் செலவிட நேர்கிறது.
டைனமிக் கட்டணத்தைச் செலுத்த முடியாத சிலருக்கு சில ரயில்கள் உயர்ந்த கட்டணம் காரணமாக எட்டாக்கனியாக உள்ளன. நாங்கள் முன்கூட்டியே முன்பதிவு செய்தாலும், பெரும்பாலான ரயில்களில் டிக்கெட்டுகள் காத்திருப்புப் பட்டியலிடப்பட்டுள்ளன. நான் செய்வது முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதுதான். அவை இறுதிவரை காத்திருக்கும் போது, நான் முயற்சி செய்து தட்கல் டிக்கெட்டுகளைப் பெற முயற்சிப்பேன். தவிர, முன்பு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்கிறேன். இது அவசரமாக இல்லாவிட்டாலும், உங்கள் குடும்பத்துடன் நீங்கள் செல்லவேண்டிய நிலையில், வேறுவழியில்லை, உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளைப் பெறவே நீங்கள் முயற்சிக்க வேண்டும்”என்றார்.