

கொல்கத்தா: மேற்குவங்கத்தில் கரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், அம்மாநில அரசு பல்வேறு கெடுபிடிகளையும் அறிவித்துள்ளது.
மாநிலத்தில் நேற்று 4,512 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. அங்கு சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 13,300 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, கேரளாவுக்கு அடுத்தபடியாக மேற்குவங்கத்தில் தான் கரோனா சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை அதிகம். மேலும் அங்கு இதுவரை 20 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது.
*இதனையடுத்து அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் அறிவித்துள்ளது.
* நளை (ஜனவரி 3 ஆம் தேதி) முதல் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் நேரடி வகுப்பு கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
* அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 50% பணியாளர்களை நேரடியாகக் கொண்டும் மீதமுள்ளோரை வீட்டிலிருந்து பணியபுரியவும் உத்தரவிட்டுள்ளது.
* டெல்லி, ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களைத் தொடர்ந்து இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
* நீச்சல் குளங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், ஸ்பா மற்றும் அழகு நிலையங்கள் இயங்க அனுமதியில்லை.
* கொல்கத்தா மெட்ரோ ரயிலில் 50% பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். உள்ளூர் பயணிகள் ரயில்கள் 7 மணி வரை மட்டுமே இயங்கும். நீண்ட தூரம் செல்லும் ரயில் நேரங்களில் மாற்றமில்லை.
* திரையரங்கம், உணவகங்கள், மதுபானக் கூடங்கள் இரவு 10 மணி வரையிலும் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.
* திருமணம், மத, கலாச்சார நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். இறுதிச் சடங்கில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.
இவ்வாறு அம்மாநில தலைமைச் செயலர் துவிவேதி உத்தரவிட்டுள்ளார்.