

புதுடெல்லி :முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை இணையதளத்திலும், மொபைல் செயலியிலும் அவர்களுக்குத் தெரியாமல் பதிவிட்டு அவர்களை ஏலமிடும் அவதூறு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு அவர்களை ஏலம் விடும் ஆப்ஸ் குறித்து சிவசேனா எம்.பி.பிரியங்கா சதுர்வேதி மும்பை போலீஸிலும் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண் பத்திரிகையாளர்(முஸ்லிம்) டெல்லி போலீஸில் புகார் செய்திருந்தனர். இரு நகரங்களிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதுபோன்ற சம்பவம் கடந்த ஆண்டு டெல்லியிலும், உ.பி.யிலும் நடந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது ஆனால், பெரிதாக நடவடிக்கை ஏதுமில்லை. இதைச் சுட்டிக்காட்டி சிவசேனா எம்.பி. பிரியங்கா திரிவேதி ட்விட்டரில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்வை டேக் செய்திருந்தார்.
ஹிட்ஹப் ஆப்ஸ் மூலம் சல்லிடீல்,புல்லிபாய் ஆகிய பெயர்களில் வரும் அந்த செயலியில் முஸ்லிம் பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு டீல் ஆஃப்தி டே என்ற தலைப்பில் ஏலம் விடும் காட்சி இடம் பெற்றுள்ளது. செயலியில் மூலம் பெண்கள் ஏலம் விடப்படவில்லை என்றாலும், முஸ்லிம் பெண்களை அவதூறு செய்வதை நோக்கமாக வைத்துள்ளது.
பிரியங்கா திரிவேதிக்கு பதில் அளித்து மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ட்விட்டரில் பதில் அளிக்கையில் “ ஹிட்ஹப் தளம் மற்றும் புல்லிபாய் செயலியை உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது, அந்த தளமும், செயலிமும் முடக்கப்பட்டுள்ளது.
அடுத்த நடவடிக்கை எடுப்பதை நான் கண்காணித்து வருகிறேன். ஹி்ட்ஹப் தளம் இன்று காலை முற்றிலுமாக முடக்கப்பட்டது. கணினி அவசரகால அதிரடிப்படையுடன் போலீஸாரும் இணைந்து் நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு டெல்லி மாவட்ட போலீஸார் சைபர் கிரைம் சட்டம் 509 பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மும்பை சைபர் கிரைம் போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கிவிட்டனர்.
மத்திய அமைச்சரின் பதிலுக்கு சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி நன்றி தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில் “ குற்றவாளிகளைப் பிடிக்க மும்பை போலீஸாருக்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறையும் உதவும் என நம்புகிறேன். எனக்கு பதில் அளித்தமைக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தை தேசிய மகளிர் ஆணையமும் கையில் எடுத்துள்ளதால், விரைவி்ல மும்பை, டெல்லி போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதேபோன்று மொபைல் செயலியில் சல்லி டீல் என்ற பெயரில் முஸ்லிம் பெண்களின் புகைப்படங்களை அவர்களுக்குத்தெரியாமல் பதிவிட்டு, அவர்கள் குறித்த அவதூறுகளையும், ஏலம் விடும் நிகழ்வுகளும் நடந்தன. இதுகுறித்து டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர் ஆனால், யாரையும் கைது செய்யவில்லை.