

குர்கான்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. மார்க்கெட், மால்கள் 5 மணி வரையே இயங்கும் எனப் பல்வேறு கெடுபிடிகளை ஹரியானா அரசு விதித்துள்ளது. வரும் 12 ஆம் தேதி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும்.
இது தொடர்பாக ஹரியானா முதல்வர் பிறப்பித்துள்ள உத்தரவில், "நாடு முழுவதும் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளா குருகிராம், ஃபரிதாபாத், அம்பாலா, பஞ்சகுலா, சோனியாபட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளும், வணிக வளாகங்களும் மாலை 5 மணிக்கே மூடப்படும்.
அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கலாம். பொதுப் போக்குவரத்து, ஓட்டல்கள், வணிக வளாகங்கள், தானிய சந்தைகளில் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
திரையரங்குகள், விளையாட்டுக் கூடங்கள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியன 5 மாவட்டங்களில் மூடியிருக்கும்.
இந்த உத்தரவுகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசி போடாதவர்களை அலுவலகங்களில் அனுமதித்தால் சம்பந்தப்பட்ட நிர்வாகத்திற்கு அபராதம் விதிக்கப்படும்" என்றார்.
ஹரியானாவில் இதுவரை 63 பேருக்கு ஒமைக்ரான் பாதிக்கப்பட்டுள்ளனர்.