Published : 02 Jan 2022 12:22 PM
Last Updated : 02 Jan 2022 12:22 PM

வெறுப்புப் பேச்சுக்கு எதிராக நடவடிக்கை: உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு மனுத்தாக்கல்

கோப்புப்படம்

புதுடெல்லி : நாட்டில் பல்வேறு மாநிலங்களில் முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக தொடர்ந்து வெறுப்புப் பேச்சுகள் எழுந்து வருவதற்கு எதிராக நடவடிக்ைக எடுக்கக் கோரி ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது.

ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா முகமது ஏ மதானி இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை வழக்கறிஞர்கள் எம்ஆர் ஷாம்சத், நியாஸ் அகமது பரூக்கி ஆகியோர் சேர்ந்து தாக்கல் செய்துள்ளனர். மத்திய அரசுக்கும் பூனா வாலாவுக்கும் இடைேய நடந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மேற்கொள் கோட்டியும், கூட்டமாகச் சேர்ந்து வன்முறை நிகழ்த்துதல், அடித்துக்கொலை செய்தலைத் தடுக்க பிறப்பித்த உத்தரவுகளையும் மேற்கோள்காட்டியுள்ளனர்.

முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு அரசியல் மற்றும் சமூக ரீதியான பாகுபாட்டை ஏற்படுத்தி, முஸ்லிம் சமூகத்தின் மதிப்பையும் மாண்பையும் குலைக்கும் விதத்தில் இருக்கிறது என்று மனுவில் பிரதானமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பு வெளியி்ட்டஅறிக்கையில், “ கடந்த 2018ம் ஆண்டிலிருந்து முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, பிரச்சாரம், வன்முறை அதிகரி்த்து வருகிறது.

சமீபத்தில் தஸ்னா கோயில் அர்ச்சகர் யாதி நரசிங்கானந்த் சரஸ்வதி முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராகப் பேசிய வன்மபப் பேச்சுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜந்தர் மந்தர் பேரணியிலும் முஸ்லிம்களுக்கு எதிராக கோஷங்கள், குருகிராமில் முஸ்லிம்களின் தொழுகைக்கு எதிரான பிரச்சாரம், முஸ்லிம்கள் மீது பசுவின் சாணியை வீசி எறிதல், மிரட்டல்கள், திரிபுராவில் நடந்த பேரணி, சூரஜ் பால், சந்தோஷ் திம்மையா ஆகியோரின் பேச்சுகள் என ஏராளமானவை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் யாதி நரசிங்கானந்த் பேச்சுக்கு எதிராக 100 முஸ்லிம்கள் சேர்ந்து உ.பியில் போராட்டம் நடத்தியபோது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்புப் பேச்சுகள் பேசப்பட்டுவரும் நிலையில் அது குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர்.

முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்கள், பேச்சுகள் குறித்து போலீஸிடம் புகார் அளித்தாலும் அது குறித்து நடவடிக்கை எடுப்பதில்லை. சட்டத்தை அமல்படுத்தும் போலீஸார், அரசுஅதிகாரிகள் செயல்படாமல் இருக்கிறார்கள், சிறுபான்மையினரை பாதுகாக்க தவறிவிட்டனர்.

ஆதலால், உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தலையிட்டு விசாரிக்க வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சுகள், வன்முறைகள், கொலைகள் ஆகியவற்றை விசாரிக்க வேண்டும் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x