Published : 02 Jan 2022 07:14 AM
Last Updated : 02 Jan 2022 07:14 AM

சீனாவின் பிடியில் இருந்து திபெத் விடுதலை ஆகுமா? - சாமர்த்தியமாக காய் நகர்த்தும் இந்தியா

புதுடெல்லி

பண்டைய காலத்தில் கிரேக்க,ரோம பேரரசுகளும் இன்றைய காலத்தில் அமெரிக்கா, ரஷ்யாவல்லரசுகளும் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணி வருகின்றன. பொருளாதார ரீதியாக வல்லரசாக உருவெடுக்க இந்தியாவும் இதே அணுகுமுறையைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது.

பழங்காலத்தில் இந்து குஷ் மலை, கடல் வழியாக இந்தியாவுக்குள் அந்நியர்கள் நுழைந்தனர். இப்போது இந்திய கடற்படையின் வலிமையால் நமது கடல் எல்லைகள் பாதுகாப்பாக உள்ளன. நிலப் பகுதியில் மேற்கே அமைந்துள்ள பாகிஸ்தான் பலவீனமாக உள்ளது. அந்த நாடு இந்தியாவுக்கு எந்தவிதத்திலும் போட்டியாக இல்லை. ஆனால் வடக்கில் அமைந்துள்ள சீனா, இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது.

பூகோள ரீதியில் இந்தியாவும் திபெத்தும் அண்டை நாடுகளாக இருந்தன. கடந்த 1950-ல் அப்போதைய சீன அதிபர் மா சே துங்கின் படைகள்,திபெத்தை ஆக்கிரமித்தன. அப்போதுமுதல் இந்தியா, சீனா இடையே எல்லைப் பிரச்சினை வெடித்தது. கடந்த 1959-ல் திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா தனது ஆதரவாளர்களுடன் இந்தியாவில் தஞ்சமடைந்தார். அவரோடு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட திபெத்தியர்களும் இமாச்சல பிரதேசத்தின் தர்மசாலாவில் குடியேறினர்.

எல்லைப் பிரச்சினையால் கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மிகப்பெரிய போர் ஏற்பட்டது. இதுதவிர டோக்லாம், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் என இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை இன்றளவும் நீறு பூத்த நெருப்பாக தகித்து கொண்டிருக்கிறது.

லடாக்கின் காராகோரத்தில் இருந்து அருணாச்சல பிரதேசத்தின் ஜாசப்லா வரை 3,488 கி.மீ. தொலைவுக்கு இந்திய, சீன எல்லை நீள்கிறது. சீனாவிடம் இருந்து திபெத் விடுதலை அடைந்தால் இந்த எல்லைப் பிரச்சினைக்கு மிக எளிதாக தீர்வு காண முடியும்.

திபெத்தின் சுதந்திர வேட்கை

சீன ஆக்கிரமிப்பை திபெத்தியர்கள் விரும்பவில்லை. கடந்த 70 ஆண்டுகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டதிபெத்தியர்களை சீன ராணுவம் படுகொலை செய்திருக்கிறது. சுமார் 6,000-க்கும் மேற்பட்ட பவுத்த மடாலயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. சொந்த மொழி, மதத்தைப் பின்பற்ற முடியாமல் அகதிகளைப் போன்று திபெத் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் வேவு பார்க்கப்பட்டு, இன்றுவரை வேட்டையாடப்பட்டு வருகின்றனர். ஐ.நா. சபையோ, மேற்கத்திய நாடுகளோ சீனாவின் அத்துமீறல்களை கண்டிக்கவில்லை, தடுத்து நிறுத்தவில்லை. எப்படியாவது சீனாவிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்ற வேட்கை திபெத் மக்களிடம் கொழுந்துவிட்டு எரிகிறது.

சீனாவின் பரப்பளவில் ஐந்தில் ஒரு பங்கு திபெத் பிராந்தியம் ஆகும். ஆசியாவின் தண்ணீர் தொட்டி என்றழைக்கப்படும் திபெத், பிரம்மபுத்திரா, சட்லஜ், மஞ்சள் நதி உட்பட 10 நதிகளின் பிறப்பிடமாகும். திபெத்தில் இருந்து உற்பத்தியாகும் நதிகளின் மூலம் சீனா, இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான், பாகிஸ்தான், வியட்நாம், தாய்லாந்து, மியான்மர், கம்போடியா, லாவோஸ் நாடுகள் வளம் அடைந்து வருகின்றன. பூகோள ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததிபெத்தை சீன கம்யூனிஸ்ட் அரசு தனது இரும்பு பிடியில் வைத்திருக்கிறது. எதிர்காலத்தில் நதிகளின் நீரை திசை திருப்பி இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் சீனா மறைமுக போரில் ஈடுபடும் அச்சுறுத்தல் மிக அதிகமாக உள்ளது.

இந்துக்களின் புனிதத் தலமான கைலாய-மானசரோவர் திபெத் பகுதியில், சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. சீனாவிடம் இருந்து இந்த புனிதத் தலத்தை மீட்க வேண்டும் என்று மிக நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இந்தியாவில் இந்து ராஜ்ஜியம் அமைய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் யோசனை கூறி வருகின்றனர். சாணக்கியர், சந்திரகுப்தா, சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோர் இந்தியாவில் இந்து ராஜ்ஜியத்தை ஏற்படுத்த கனவு கண்டனர். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு இந்துக்களின் மத்தியில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.

எல்லைப் பிரச்சினை, தண்ணீர் பிரச்சினை, கைலாய-மானசரோவர் மீட்பு ஆகிய விவகாரங்களுக்கு தீர்வு காண சீனாவுடன் நேரடி போரில் ஈடுபடுவதை யாரும் விரும்பவில்லை. அதேநேரம் ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் சீனாவின் பிடியில் இருந்து திபெத்தை விடுதலையடைய செய்து 3 பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் விவகாரம்

சர்வதேச அரங்கில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஓரணியாகவும் சீனாவும் ரஷ்யாவும் எதிரணியாகவும் செயல்படுகின்றன. இந்தியா எந்த பக்கமும் சாயாமல் நடுநிலையாக நங்கூரமிட்டு நிற்கிறது. தைவான் விவகாரத்தில் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடி மோதல் நீடிக்கிறது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் களமிறங்கியுள்ளன.

உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க வேண்டும். அமெரிக்காவுடன் நேரடி மோதலில் ஈடுபட வேண்டும் என்று சீனா விரும்புகிறது. கிரிப்டோகரன்சி மூலம் டாலரின் மதிப்பை குறைக்க வேண்டும் என்று துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றன.

இந்த சூழலில் இந்தியாவை தங்கள் பக்கம் இழுக்க அமெரிக்காவும், ரஷ்யாவும் தீவிர முயற்சி செய்து வருகின்றன. சீனாவுடனான எல்லைப்பிரச்சினை காரணமாக அண்மைகாலமாக அமெரிக்காவின் பக்கம் இந்தியா நகர்ந்து செல்கிறது. இதை தடுக்க சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த ரஷ்ய அதிபர் புதின் தீவிர முயற்சி செய்து வருகிறார்.

சர்வதேச அரங்கில் இந்தியா தங்கள் பக்கம் இருக்க வேண்டும் என்று ரஷ்யாவும் சீனாவும் விரும்புகின்றன. இல்லையெனில் இந்தியா நடுநிலையை கடைபிடிக்க வேண்டும் என்று இரு நாடுகளும் வலியுறுத்துகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய இந்தியா, இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்தி கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கரோனா வைரஸ், லடாக் மோதல் உள்ளிட்ட விவகாரங்களில் சீனாவின் வல்லரசு பிம்பம் சுக்குநூறாக உடைந்துள்ளது. சர்வதேச அரங்கில் சீனா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நேரத்தில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகளால் சீனா வளைந்து கொடுக்க நேரிடும். இதன்மூலம் அந்த நாட்டின் பிடியில் இருந்து திபெத் விடுதலையாகலாம் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x