

நம்பகத்தன்மை குறித்து சர்வதேச அளவில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மருத்துவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அரசியல்வாதிகள் கடைசி இடத்தில் உள்ளனர். உலகின் நம்பகமான நாடுகள் பட்டியலில் மலேசியா முதலிடத்தையும் இந்தியா 2-வது இடத்தையும் பெற்றுள்ளன.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இப்சாஸ் என்ற நிறுவனம் சர்வதேச அளவில் முக்கிய விவகாரங்கள் தொடர்பாக கருத்து கணிப்பு நடத்தி வருகிறது. இந்த வரிசையில் சர்வதேச அளவில் நம்பகத்தன்மை குறித்துஅந்த நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இதில் நம்பகத்தன்மைமிக்க பணியாளர்களில் மருத்துவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். மருத்துவர்களுக்கு ஆதரவாக 64% பேர் வாக்களித்துள்ளனர். அதற்கு அடுத்து விஞ்ஞானிகளுக்கு 61%, ஆசிரியர்களுக்கு 55%, ராணுவ வீரர்களுக்கு 42 %, போலீஸாருக்கு 37%, நீதிபதிகளுக்கு 34%, வழக்கறிஞர்களுக்கு 29%, தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்களுக்கு 27%,மத போதகர்களுக்கு 25%, அரசுஊழியர்களுக்கு 24%, செய்தியாளர்களுக்கு 23%, வங்கி ஊழியர்களுக்கு 23%, தொழிலதிபர்களுக்கு 23%, அமைச்சர்களுக்கு 14% பேரும்ஆதரவு அளித்துள்ளனர்.
அரசியல்வாதிக்கு கடைசி இடம்
இப்சாஸின் நம்பகத்தன்மைபட்டியலில் அரசியல்வாதிகள் கடைசி இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக 10% மக்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
சர்வதேச நாடுகளில் மருத்துவர்கள் மீது அந்த நாட்டு மக்கள் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது குறித்து இப்சாஸ் கருத்து கணிப்பு நடத்தியுள்ளது. இதில் பிரிட்டிஷ் மருத்துவர்களுக்கு 72% மக்கள் ஆதரவுஅளித்துள்ளனர். நெதர்லாந்து மருத்துவர்களுக்கு 71% பேரும், கனடாமருத்துவர்களுக்கு 70% பேரும்ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் மருத்துவர்கள் மீது 64% மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
உலகின் நம்பகமான நாடு குறித்து இப்சாஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் மலேசியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு 2-ம் இடம் கிடைத்துள்ளது. சுவீடன், நெதர்லாந்து, கனடா, அமெரிக்கா, துருக்கி, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.