Published : 02 Jan 2022 05:25 AM
Last Updated : 02 Jan 2022 05:25 AM

ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

ஜம்மு-காஷ்மீர் வைஷ்ணவி தேவி கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 16 பக்தர்கள் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

ஜம்முவின் கத்ரா பகுதியில் வைஷ்ணவி தேவி குகைக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் சுமார் 80 லட்சம் பக்தர்கள் வருகை தருகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு அடுத்து பக்தர்கள் அதிகம் கூடும் புனிததலமாக வைஷ்ணவி தேவி கோயில் விளங்குகிறது.

புத்தாண்டையொட்டி வைஷ்ணவி தேவி கோயிலில் நேற்று அதிகாலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 2.30 மணி அளவில் கோயில் கருவறைக்கு வெளியே 3-வது நுழைவுவாயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 16 பேர் உயிரிழந்தனர். அவர்கள் டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந் தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

காயமடைந்தவர்கள் கத்ராவில் செயல்படும் நாராயணா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

வைஷ்ணவி தேவி கோயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா விளக்கம் அளித்தார். ஜம்மு பகுதியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், கத்ரா பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

பிரதமர் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "வைஷ்ணவி தேவி கோயிலில் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங் களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "வைஷ்ணவி தேவி கோயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன?

நேரில் பார்த்த சாட்சிகள் கூறும்போது, "பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டது. புத்தாண்டு என்பதற்காக வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்களை அனுமதித்தது தவறு" என்று தெரிவித்தனர்.

ஜம்மு-காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங் கத்ராவுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, "வைஷ்ணவி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்குமாறு கோயில் அறக்கட்டளையிடம் அறிவுறுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் உத்தரவின்பேரில் விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க உள்துறை முதன்மை செயலாளர் தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x