

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டான நேற்று சுவாமியை தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இரவு முழுவதும் முன்பதிவு செய்த பக்தர்களில் சிலர் நேர்த்திகடனாக அலிபிரி மலை வழியாக திருமலைக்கு சென்றனர். பலர் கால்நடையாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து திருப்பதிக்கு வந்தனர். இவர்களில் சிலர் தரிசன டிக்கெட்டை முன்பதிவு செய்துக்கொள்ளாததால், திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட வில்லை. ஆதலால், இவர்கள் அலிபிரி மலையடிவாரத்தில் உள்ள பாதால மண்டபம் ஏழுமலையான் கோயிலில் சுவாமியை தரிசித்து விட்டு, தேங்காய் உடைத்து வழிபாடு செய்து அவரவர் ஊர்களுக்கு திரும்பி சென்றனர். ஆங்கில புத்தாண்டில் ஏழுமலையானை தரிசிக்க விஐபி பக்தர்களும் அதிக அளவில் திருமலைக்கு வந்தனர். இதில், ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா நேற்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். இவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து, தீர்த்த பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
இதேபோன்று, ஆந்திர மாநில துணை முதல்வர் நாராயணசாமி, தமிழக அமைச்சர் காந்தி, ஆந்திர மாநில கொறடா செ. பாஸ்கர் ரெட்டி, குஜராத் அமைச்சர் ஜித்தேந்திர சவுத்ரி, நடிகர் சாய் குமார், நடிகை கங்கனா ரனவத் இயக்குனர் அணில் ராவல் ராவுபுடி உட்பட பலர் நேற்று காலை விஐபி பிரேக் சமயத்தில் சுவாமியை தரிசித்துக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர். டிசம்பர் மாதம் 31ம் தேதி ஏழுமலையானை மொத்தம் 21,263 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துக்கொண்டனர். இதில், 8,629 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். அன்றைய தினம் ரூ. 2.83 கோடி உண்டியல் காணிக்கை வந்ததாக தேவஸ்தானம் ஓர் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.