

தமிழகத்தின் குன்னூரின் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த மாதம் 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.இதில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா உட்பட 13 பேர் உயிரிழந்தனர். குரூப் கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இதுகுறித்து விசாரிக்க ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் முப்படை அதிகாரி கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களை 6,600 மணி நேரம் இயக்கிய அனுபவம் கொண்ட மன்வேந்தர் சிங் மற்றும் குழுவினர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் முகாமிட்டு நேரடி விசாரணை நடத்தினர். அதே பகுதியில் ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு செய்தனர்.
கடந்த 9-ம் தேதி ஹெலி காப்டரின் கருப்பு பெட்டி மற்றும் "காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்" ஆகியவை கண்டு எடுக்கப்பட்டன. அவற்றில் பதிவான கடைசி நேர உரையாடல்களை முப்படைகளின் குழு ஆய்வு செய்துள்ளது.
இந்நிலையில், விமானப் படை தளபதி வி.ஆர்.சவுத்ரி, குன்னூர் விபத்து தொடர்பாக முப்படைகளின் விசாரணை குழு வினருடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
விசாரணை குழு தனது முழுமையான அறிக்கையை தயார் செய்திருப்பதாகவும் அடுத்தஒரு வாரத்தில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.-பிடிஐ