

"தான் பிரதமரானதை நரேந்திர மோடியால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் இன்னும் பிரச்சாரத்தில் பேசுவது போல பேசிக் கொண்டிருக்கிறார். அவர் இந்த நாட்டின் பிரதமர். பிரதமரைப் போல நடந்து கொள்ள வேண்டுமே தவிர எதிர்கட்சித் தலைவரைப் போல அல்ல" என்று காங்கிராஸ் தலைவர் ஷகீல் அகமது விமர்சித்துள்ளார்.
முன்னதாக, பனாஜியில் நடந்த விழா ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருப்பதாகவும், முந்தைய காங்கிரஸ் ஆட்சி எதையும் விட்டுச் செல்லவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து இவ்வாறு பதிலளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் வெளிநாடு செல்வதற்கு 10 நாட்களுக்கும் முன்பே பிரதமர் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். சுற்றுப்பயணம் முடிந்தவுடன் ஒரு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று சமீபத்தில் பிரதமர் அலுவலகம் மத்திய அமைச்சர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
இந்த உத்தரவையும் விமர்சித்துள்ள ஷகீல் அகமது, "மோடி அரசு மக்களை ஏமாற்றத் துவங்கிவிட்டது. இத்தகைய உத்தரவுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. ஆனால் புதிதாக பிறப்பிப்பதைப் போல மக்களின் கண்களில் மண்ணைத் தூவுகின்றனர். சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டிய விண்ணப்பத்திற்கு முதலில் பிரதமர் அலுவலகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஒப்புதல் அளிக்கும். எப்போதுமே தகவல்கள் பிரதமருக்கு முன்னரே தெரிவிக்கப்படும். யாரும் சட்டென்று வெளிநாடு செல்வதில்லை" என்று அகமது கூறினார்.
முன்னதாக, அந்தச் சுற்றறிக்கையில், சுற்றுப்பயணம் செல்வதற்கு 10 நாட்களுக்கு முன்னர் தெரிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு முன், இது 5 நாட்கள் என இருந்தது. மேலும், இதற்கு முன், சுற்றுப் பயணம் செல்லும் அமைச்சர்கள் பிரதமர் அலுவலகத்தில் தெரிவித்தால் மட்டும் போதும் என்று இருந்தது. இனி பயணத் திட்டத்தை சமர்பித்து விட்டு, பிரதமர் ஒப்புதல் அளித்த பின்னரே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.