

இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு, பதான் கோட் விமானப்படை தளத்தில் நேற்று 4 மணி நேரம் வரை நேரில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது விமானப்படை தளத்துக்கு வெளியே காங்கிரஸ், ஆம் ஆத்மி தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்துக்குள் கடந்த ஜனவரி 2-ம் தேதி ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யிருந்தது. இந்த சம்பவம் தொடர் பாக விசாரணை நடத்துவதற்காக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரி உட்பட 5 பேர் கொண்ட குழு சமீபத்தில் டெல்லி வந்தடைந்தது. தொடர்ந்து என்ஐஏ அதிகாரி களுடன் இக்குழுவினர் நேற்று முன் தினம் விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினர்.
வான்வழியாக பதான்கோட் விமானப்படை தளத்தை பார்வை யிடுவதை தடுப்பதற்காக பாகிஸ் தான் குழுவினர் அமிர்தசரஸ் வரை மட்டுமே தனி விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து 118 கி.மீ தூரம் வரை சாலை வழியாக கார் மூலம் சென்றனர். பாகிஸ்தான் குழுவின ருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டதால், அவர் களுக்கு குண்டு துளைக்காத காரும், பஞ்சாப் மாநிலத்தின் கமாண்டோ படை பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. அவர்களது கார் விமானப்படை தளத்தை அடைந்த தும் கடந்த ஜனவரி 2-ம் தேதி தீவிரவாதிகள் நுழைந்த அதே பகுதி வழியாகவே, பாகிஸ்தான் விசாரணை குழுவினரும் அழைத் துச் செல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் விசாரணை குழு வினரின் பார்வையில் படாத வகையில் விமானப்படை தளத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளை திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தன. மேலும் ராணுவ அதிகாரிகளிடம் அவர்கள் பேசுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.
பின்னர் பதான்கோட்டில் தாக்கு தல் நடத்துவதற்கு முன், பஞ்சாப் எஸ்.பி சல்வீந்தர் சிங்கை தீவிரவாதிகள் கடத்தியதாக கூறப்படும் பகுதிக்கும் விசாரணை குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து 4 மணி நேரம் வரை பதான்கோட்டில் ஆய்வு செய்த பின், பாகிஸ்தான் விசாரணை குழுவினர் மீண்டும் அமிர்தசரஸ் அழைத்து செல்லப்பட்டனர்.
தீவிரவாத வழக்கு தொடர்பாக பாகிஸ்தான் விசாரணை குழுவினர் இந்தியாவுக்கு வருவதும், அவர்களை ராணுவம் சார்ந்த முக்கிய இடங்களுக்கு அனுமதித்திருப்பதும் இதுவே முதல் முறையாகும்
முன்னதாக பதான்கோட் விமானப்படை தளத்துக்கு வெளியே, பாகிஸ்தான் விசாரணை குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தொண்டர்கள் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பாகிஸ்தானுக்கு எதிராக அவர்கள் கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் விமானப்படை தளம் அமைந்துள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.