

புதுடெல்லி: டெல்லி ஐஐடி, டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா, இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் உள்ளிட்ட 6000 நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறுவதற்கான எப்சிஆர்ஏ பதிவு திடீரென முடக்கப்பட்டுள்ளது.
இந்த 6000 நிறுவனங்களும் தங்களின் அங்கீகாரத்தைப் புதுப்பிக்காமல் இருக்கலாம் அல்லது மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நிறுவனங்களின் அங்கீகாரப் புதுப்பிப்பு விண்ணப்பத்தை நிராகரித்து இருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து ஒரு அமைப்பு, தனியார் தொண்டு நிறுவனம், சங்கம் ஆகியவை நிதியுதவி பெற வேண்டுமானால், உள்துறை அமைச்சகத்திடம் அந்நியப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து சான்று அல்லது அங்கீகாரம் பெற்றால் மட்டுமே நிதியுதவி பெற முடியும்.
உள்துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் எப்சிஆர்ஏ சட்டத்தின்படி, இந்த 6000 நிறுவனங்களின் உரிமம் காலாவதியாகியிருக்கலாம் அல்லது விண்ணப்பங்களை அமைச்சகம் நிராகரித்ததன் காரணமாகச் செயல்பாடு நிறுத்தப்பட்டிருக்கலாம்.
இதில் இந்திராகாந்தி தேசிய கலை மையம், ஐஐபிஏ, லால் பகதூர் சாஸ்திரி நினைவுஅறக்கட்டளை, லேடி ஸ்ரீராம் மகளிர் கல்லூரி, டெல்லி பொறியியல் கல்லூரி, ஆக்ஸ்ஃபாம் இந்தியா ஆகியவற்றின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.
எப்சிஆர்ஏவில் இதுவரை 22,762 பதிவு செய்த நிறுவனங்கள் நேற்றுவரை இருந்தன. ஆனால் இன்றுகாலை முதல் எண்ணிக்கை 16,829 ஆகக் குறைந்துவிட்டது. அதாவது 5,933 நிறுவனங்களின் செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.
இதில் இந்திய மருத்துவ கவுன்சில், இமானுவேல் மருத்துவக் கூட்டமைப்பு, இந்திய காசநோய் கூட்டமைப்பு, விஸ்வ தர்மயாதன், மகரிஷி ஆயுர்வேதா பரிஸ்தன், தேசிய மீனவர் கூட்டமைப்பு, ஹம்தார்டு கல்விச் சமூகம், டெல்லி ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க் சொசைட்டி, பாரதிய சம்ஸ்கிருதி பிரிஷத், டிஏவி கல்லூரி அறக்கட்டளை மற்றும் மேலாண்மை, இந்திய இஸ்லாமிய கலாச்சார மையம், கோத்ரேஜ் நினைவு அறக்கட்டளை, தி டெல்லி பப்ளிக் ஸ்கூல் சொசைட்டி, ஜேஎன்யு நியூக்ளியர் சயின்ஸ் சென்டர், இந்திய ஹேபிடென்ட் சென்டர், மகளிர் ஸ்ரீராம் கல்லூரி, டெல்லி பொறியியல் கல்லூரி, அனைத்து இந்திய மார்வாரி யுவ மன்ச் ஆகியவை அடங்கும்.
இதற்கிடையே எப்சிஆர்ஏ அங்கீகாரத்தைப் புதுப்பிக்கும் கால அவகாசத்தை 2022, மாச்ர் 31-ம் தேதிவரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது.
ஆனால், கொல்கத்தாவைச் சேர்ந்த மிஷனரி ஆஃப் சாரிட்டி அமைப்பு நிதியுதவி பெறும் தகுதியை இழந்துவிட்டது. இந்த அமைப்பின் விண்ணப்பம் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்டுவிட்டதால், மீண்டும் புதுப்பிக்க முடியாது. மேலும், பொதுநலன் கருதி, என்ஜிஓக்கள் எப்சிஆர்ஏ சான்றுகளின் காலக்கெடுவும் மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.