Published : 01 Jan 2022 08:47 AM
Last Updated : 01 Jan 2022 08:47 AM
லக்னோ: காங்கிரஸால் நாட்டுக்கு எப்போதும் பிரச்சினை மட்டுமே என சோனியா காந்தியின் தொகுதியான ரே பெரேலியில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ளது. நாடே எதிர்நோக்கும் இந்தத் தேர்தலுக்கு பாஜக ஆயத்தமாகி வருகிறது.
நேற்று காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பெரேலியில் பேசிய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் காங்கிரஸ் கட்சியை சரமாரியாக விளாசினார்.
அவர் பேசியதாவது:
காங்கிரஸ் என்றாலே நாட்டிற்குப் பிரச்சினை தான். காங்கிரஸ் தான் தீவிரவாதத்தின் வேர். நாட்டில் நிலவும் குழப்பங்களுக்கும், ஊழலுக்கும் அதுவே அடிப்படை. மதவாதத்தையும், மொழி பேதத்தையும் விதைக்கும் கட்சி காங்கிரஸ்.
ரே பெரேலி தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் பாஜகவில் இணைந்து வருகின்றனர். இத்தொகுதியில் இருந்து காங்கிரஸ் வேரறுக்கப்படும். ரே பெரெலி வெளிநாட்டவர் ஆட்சியை ஆதரிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜன்விஸ்வாஸ் யாத்திரையின் ஒரு பகுதியாக நேற்று நடந்த நிகழ்வில் ரூ.834 கோடி செலவில் 381 திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகளையும் அவர் விமர்சித்துப் பேசினார்.
அப்போது அவர், "சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் கூட உ.பி.க்குப் பிரச்சினையாகத் தான் இருக்கின்றன. சமாஜ்வாதி கொடியுடன் ஒரு வாகனம் செல்கிறது என்றால் அதனுள்ளே ஒரு ரவுடி இருப்பார் என மக்களுக்குத் தெரியும். பாஜக மக்களுக்காக செயல்படுகிறது. மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுக்கிறது. இதை சமாஜ்வாதியும், காங்கிரஸும், பகுஜன் சமாஜ் கட்சியும் செய்யுமா? ராமரையும், கிருஷ்ணரையும் கற்பனைக் கதாபாத்திரம் எனக் கூறுபவர்கள் எப்படி கோயில் கட்டுவார்கள். ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துபவர்களால் கோயில் கட்ட முடியுமா? காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய மூன்றுமே ஊழலின் கூடாரம் தான்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!